சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தனது தொகுதிக்கான பல்வேறு திட்டப் பணிகள் குறித்து கோரிக்கை விடுத்தார். இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், “கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்கம்.
கோயம்புத்தூர் விமான நிலையத்தை சர்வதேச தரத்திலான விமான நிலையமாக மாற்றுவதற்கு மாநில அரசு நிலங்களை கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது விமான நிலையத்திற்கு தேவைப்படும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய இழப்பீடுகளைக் கொடுத்த பிறகு விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலங்களை வழங்க உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நல்ல செய்தி சொல்லியிருக்கிறார். விமான நிலைய விரிவாக்கத்திற்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் மாநில அரசு மத்திய அரசிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும். அதன் பிறகு மத்திய அரசு விமான நிலையத்தை மேம்படுத்தும். கோயம்புத்தூர் மற்றும் நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் தொழில்துறையினருக்கு விமான நிலையம் முக்கியமானதாகும்” என்றார்.
மேலும், முதலமைச்சரிடம் தனது தொகுதி சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை விடுத்ததாக தெரிவித்தார். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சியில், இணைச் செயலாளர்களை இடஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் நேரடியாக நியமிப்பது ஆர்எஸ்எஸ் உள்ளவர்களை உள்ளே நுழைப்பதற்காகவா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “மத்திய அரசின் முக்கிய துறைகளில் திறமையானவர்களை நேரடி நியமனம் செய்கிறார்கள்.
நிரந்திர வேலையாக இல்லாமல் ஒரு சில காலத்திற்கு மட்டும் நேரடி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதனால் இட ஒதுக்கீடு உள்ளிட்டவைகள் பாதிப்பு ஏற்படாது. இந்த நாட்டின் பிரதமர் ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர். இந்த நாட்டின் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என 95 சதவீதம் பேர் ஆர்.எஸ்.எஸ் சேர்ந்தவர்கள்.
பாஜக கட்சியில் உள்ள தேசியத் தலைவர்கள் அனைவருமே ஆர்.எஸ்.எஸ்ஸைச் சார்ந்தவர்கள். அரசாங்கத்தையே மக்கள் ஆர்.எஸ்.எஸ் பின்னணி உள்ளவர்களிடம் ஒப்படைத்துள்ள நிலையில் இந்த கேள்விக்கு இடமில்லை. திமுகவுடன் பாஜக உறவு என்பதெல்லாம் கிடையாது. நாங்கள் எப்போதும் ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: மோடி இதனைச் செய்வார்.. குலதெய்வத்திடம் வேண்டுதல் வைத்த வேலூர் எம்பி கதிர் ஆனந்த்! - MP Kathir Anand