சென்னை: இன்றைய சட்டபேரவை கூட்டத்தில் வினா விடைகள் நேரத்தில் கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார், “கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பெருத்துறை மற்றும் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிகள் இணைக்கப்பட்டு, பெருந்துறை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கோவை, பெங்களூர், பழனி, திருச்சி, சத்தியமங்கலம் செல்லும் கனரக வாகனங்களும், மக்கள் செல்லும் போக்குவரத்து பேருந்துகளும், பெருந்துறை நகரம் வழியாக பயணிக்க வேண்டியுள்ளது. பெருந்துறை நகரையொட்டி, 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலையில் இயங்கும் சிப்காட் நிறுவனமும், இருபதுக்கும் மேற்பட்ட கல்லூரிகளும், பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களும் உள்ளதால், தினந்தோறும் பெருந்துறை நகருக்குள் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
எனவே, கோவை சாலை மேட்டுப்பாளையம் பிரிவிலிருந்து பழைய பேருந்து நிலையம், குன்னத்தூர் நான்குரோடு அண்ணா சிலை ரவுண்டானா, காவல் நிலைய ரவுண்டானா ஆகிய இடங்களை இணைத்து, உயர் மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
மேலும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலை 544-இல், கடந்த 2009ஆம் ஆண்டு குமாரபாளையம் - செங்கப்பள்ளி இடையே 48 கி.மீ சாலை, தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டதற்குப் பிறகு, 15 ஆண்டுகளில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விபத்துகளில், 450-க்கும் மேற்பட்டோர் இறப்பும், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பெருங்காயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தற்போது காஞ்சிகோவில் பிரிவு, துடுப்பதி பிரிவு ஆகிய இரண்டு இடங்களிலும் சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் மட்ட மேம்பாலப் பணிகள் அமைக்கும் பணிகள் அடுத்த மாதம் துவங்கப்பட உள்ளது.
எனவே, இத்திட்டத்தில் விடுபட்டுப்போன ஓலப்பாளையம் பிரிவு மற்றும் சரளை பிரிவு ஆகிய நெடுஞ்சாலை சந்திப்புகளில் சர்வீஸ் சாலைகளுடன் கூடிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அரசு ஆவணம் செய்யுமா” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஏ.வா.வேலு, அனைத்து கோரிக்கைகளும் எடுத்துக் கொள்ளப்பட்டு, பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒகேனக்கல்லில் புதிய புனல்மின் நிலையம் கொண்டுவர வாய்ப்புள்ளதா? - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்