சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி 18வது நாடாளுமன்றத் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இத்தேர்தலில் கத்தரி வெயிலையும் பொருட்படுத்தாமல், ஏராளமான பொதுமக்கள் வாக்களித்திருந்தனர். இதனிடையே, ஓயாத தேர்தல் பிரச்சாரப் பணிகளால் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கிடையே, பலரும் கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் 22 மாவட்டங்களில் ஏற்பட்டு வரும் வறட்சியையும், இதனால் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையையும் சமாளிக்க ஆய்வுக் கூட்டம் நடத்தி தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதே நேரத்தில், ஓய்வுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது குடும்பத்துடன் 5 நாள்கள் பயணமாக கொடைக்கானலுக்கு இன்று புறப்பட்டுச் சென்றுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து கார் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொடைக்கானல் செல்கிறார். இதன் பின்னர், மதியம் 1.00 மணியளவில் கொடைக்கானல் பாம்பர் புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு செல்ல உள்ளார்.
இதைத்தொடர்ந்து, மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் தங்கி குடும்பத்தோடு ஓய்வு எடுக்க உள்ளார். அவ்வப்போது, கொடைக்கானலின் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்தோடு முதலமைச்சர் செல்லலாம் எனவும் கூறப்படுகிறது. மே 4ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் வருகையால், அங்கு 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் ஏதுமில்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தக்காளி சாஸில் நெழிந்த புழுக்கள்.. நடிகர் விஜய் விஷ்வா ஆவேசம் - வீடியோ வைரல் - Actor Vijay Vishwa