திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மஞ்சம்பாக்கத்தில் நேற்று (திங்கட்கிழமை) இந்தியா கூட்டணியின் சார்பில் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மற்றும் வட சென்னை வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், "திமுகவின் கோட்டையான திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில், காங்கிரஸ் சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் சசிகாந்த், ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தவர். அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்கள் பணியாற்ற வந்துள்ளார்.
தனது அறிவாற்றலால் காங்கிரஸின் வெற்றிக்காக உழைப்பவர். எனவே, திருவள்ளூர் தொகுதி மக்கள் 'கை' சின்னத்தில் வாக்களித்து, தங்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். அதேபோல், வடசென்னை தொகுதியில், திமுகவிற்கும் வட சென்னைக்குமான உறவு தாய்க்கும் சேய்க்குமான உறவு. நான் முதலமைச்சராக, என்னைத் தேர்ந்தெடுத்த கொளத்தூரை உள்ளடக்கியது இத்தொகுதி.
இந்த வடசென்னை தொகுதி வேட்பாளராகப் போட்டியிடும் கலாநிதி வீராசாமி, கருணாநிதியின் நிழலாக இருந்த அண்ணன் ஆர்க்காட்டாரின், அருமை மகன். மக்கள் பிணியை போக்கும் புகழ்பெற்ற மருத்துவரான இவர், சமூகப்பிணியை போக்க நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகிறார்.
அவரின் குரல் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஒலிக்க, வட சென்னை மக்கள் 'உதயசூரியன்' சின்னத்தில் கலாநிதி வீராசாமிக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும். இதுவரை நீங்கள் எத்தனையோ தேர்தல்களைப் பார்த்திருக்கலாம். பல இளைஞர்களுக்கு இது முதல் தேர்தலாக இருக்கலாம். ஆனால், இது சற்றே மாறுபட்ட தேர்தல். மிகமிக முக்கியமான தேர்தல்.
ஏனென்றால், இந்த தேர்தலில் நீங்கள் போடும் வாக்குதான், இந்தியாவில் இனி 'ஜனநாயகம்' இருக்க வேண்டுமா? அல்லது 'சர்வாதிகாரம்' இருக்கவேண்டுமா? இந்தியாவில் புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய சட்டம் இருக்க வேண்டுமா? அல்லது ஆர்எஸ்எஸ் எழுதும் சட்டம் இருக்க வேண்டுமா? இட ஒதுக்கீடு முறை இருக்க வேண்டுமா? அல்லது வேண்டாமா? எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக சேர்ந்து வாழ வேண்டுமா? வாழக்கூடாதா? இதையெல்லாம் முடிவு செய்யப்போகும், தேர்தல் இது. உங்கள் வாக்குதான் அந்த முடிவை தீர்மானிக்கப் போகிறது.
பாஜகவும், பிரதமர் மோடியும் வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு. திமுக - காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கைகள், இந்தத் தேர்தலின் 'ஹீரோ'. ஆனால், பாஜக வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையோ, இந்த நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் 'வில்லன்'. அதற்கு காரணம், பாஜக மத அடிப்படையில் இந்த நாட்டு மக்களை பிளவுபடுத்தும் பொது சிவில் சட்டம் (UCC) கொண்டுவரப்படும் என்று அறிவித்ததுதான். நாட்டிற்கு வரப்போகும் மிகப்பெரிய ஆபத்துக்கான டிரெய்லர் தான், இச்சட்டம். இந்தியாவில் நேரு தொடங்கி மோடி வரைக்கும், 14 பேர் பிரதமராக இருந்திருக்கிறார்கள்.
ஆனால், இப்போது இருக்கும் பிரதமர் மோடி போன்று, ED, IT, CBI வைத்து மிரட்டிக் கட்சியை உடைப்பது, எம்.எல்.ஏ, எம்.பிக்களை வாங்குவது, முதலமைச்சர்களைக் கைது செய்வது, தொழிலதிபர்களை மிரட்டித் தேர்தல் பத்திரம் வாங்குவது, பிஎம் கேர்ஸ் (pm cares fund) என்று தனியார் அறக்கட்டளை வைத்து நிதி வாங்குவது என்று, வசூல் செய்த ஒரே 'வசூல்ராஜா' மோடி ஒருவர்தான். வாயைத் திறந்தாலே சாதி, மதம் என்று மக்களைப் பிளவுபடுத்தித்தான் பேசுகிறார். பதவியில் தொடர முடியாது என்ற வெறியில் தான், பிரிவினைப் பேச்சில் ஈடுபட்டிருக்கிறார்" எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: "பாஜகவுடன் எனக்கு ஒத்துப்போகவில்லை" - வீரப்பன் மகள் மனம் திறந்த பேட்டி! - Veerappan Daughter In Politics