தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் "மக்களுடன் முதல்வர்" (Makkaludan Mudhalvar) திட்டம் ஊரகப்பகுதிகளில் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இத்திட்டத்தினை தொடங்கி வைக்கிறார்.
இந்த நிலையில், முதலமைச்சர் கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சி நடைபெறும் பகுதியை வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, தருமபுரி எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். மேலும், இந்த ஆய்வின்போது தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அ.மணி, மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரான்சிலி ராஜ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளில் மூன்று முறை தருமபுரிக்கு வந்து, பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை வழங்கியுள்ளார். அதாவது, மகளிர் உரிமைத் தொகை பெற பதிவு செய்யும் முகாம் தருமபுரியில் தான் துவங்கப்பட்டது.
மேலும், வத்தல்மலை மலைவாழ் மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையான பேருந்து வசதி மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டடம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளைத் துவக்கி வைக்க 3 முறை வந்துள்ளார்.
தற்போது 4வது முறையாக, வரும் 11ஆம் தேதி ஊரக பகுதியில் வாழும் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும், மக்களை நாடிச் செல்லும் தமிழக அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான "மக்களுடன் முதல்வர்" என்ற திட்டத்தினை தருமபுரியில் துவக்கி வைக்கவுள்ளார்.
மேலும், இவ்விழாவில் பல்வேறு முடிவுற்ற பணிகளைத் துவக்கி வைக்கும் முதலமைச்சர், நலத்திட்ட உதவிகளை வழங்கி புதிய பேருந்துகளையும் துவக்கி வைக்கிறார். அதாவது, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளார். ஒரு காலத்தில் அமைச்சர் என யாரையும் பார்க்க முடியாது. ஆனால், தற்போது முதலமைச்சரை எளிதாக பார்க்கக்கூடிய சூழலில் வந்து கொண்டிருக்கிறார். இதைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கருணாநிதி 1989ஆம் ஆண்டு, இதே தருமபுரி மாவட்டத்தில் தான் மகளிர் சுய உதவிக் குழுக்களை துவக்கி வைத்தார். பெண்கள் பொருளாதாரத்தில் உயர்ந்து அவர்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என சுழல் நிதியை வழங்கி பெண்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டு திட்டங்களை அறிவித்தார். அவை அனைத்தும் இன்று ஆலமரம் போல் வளர்ந்துள்ளது" எனத் தெரிவித்தார்.