சென்னை: காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ஆம் ஆண்டு பிப்ரவரி 5 அன்று அளித்த இறுதி ஆணையினையும், உச்ச நீதிமன்றத்தின் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பினையும் செயல்படுத்த காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகிய அமைப்புகளை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கர்நாடகா அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் அளிக்க முடியாது என கர்நாடக அரசு தெரிவித்திருப்பதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கண்டனம்.#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin @katpadidmk @mp_saminathan pic.twitter.com/uRxEOqM6do
— TN DIPR (@TNDIPRNEWS) July 15, 2024
இதன்படி, 2018ஆம் ஆண்டு ஜூன் முதல் இவ்வமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தீர்ப்புகளின் படி தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நீரை கடந்த ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாடி நீரைப் பெற்றது. தற்போதைய தென்மேற்கு பருவமழைக் காலத்தில், கர்நாடக அணைகளின் நீர்வரத்தைக் கணக்கில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகிய அமைப்புகள் தமிழ்நாட்டிற்கு பிலிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரினை கணக்கிட்டு ஜூலை 12 முதல் 31 வரை நாளொன்றுக்கு ஒரு டிஎம்சி நீரை விடுவிக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைப்பு ஆணையிட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்து இருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக ஸ்டாலின் தெரீத்துள்ளார். அதேநேரம், இந்த ஆணையை உடனடியாக செயல்படுத்திட தமிழ்நாடு அரசு காவிரி நீர் மேலாணமை ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
இவ்வாறு காவிரி நீர் ஒழுங்காற்று ஆணையின்படி நீரை விடுவிக்காத கர்நாடகத்தின் செயல் உச்ச நீதிமன்றத்தின் ஆணையை மீறுவதாக சாடியுள்ள ஸ்டாலின், இன்றைய அளவில் (ஜூலை 15) கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளின் நீர் இருப்பு 75.586 டிஎம்சி ஆகும்.
மேலும், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி மழை சரியான அளவில் பெய்ய வாய்ப்புள்ளது. மேட்டூர் அணையில் வெறும் 13.808 டிஎம்சி அளவிற்கு மட்டுமே நீர் உள்ளது. இந்தச் சூழலில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையின்படி வரையறுக்கப்பட்டுள்ள நீரை கர்நாடகா தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு, தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது எனவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில், காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நீர்வளத்துறை அமைச்சர்
துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நாளை (ஜூலை 16) காலை 11.00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட்டிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இக்கூட்டத்தில் அனைவரையும் கலந்தாலோசித்து, சட்ட வல்லுநர்களின் கருத்துக்களைப் பெற்று, தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்.
இதையும் படிங்க: தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க கர்நாடகா மறுக்க என்ன காரணம்? விளக்கமும்... விவகாரமும்..