சென்னை: நாட்டின் 78வது சுதந்திர தினம் இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசின் சார்பாக சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பின்னர், விழாவில் பேசிய முதலமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நிதி & மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "சுதந்திர தின விழா உரையில் மிகச் சிறப்பான அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார்.
அதுவும் 'முதல்வர் மருந்தகம்' என்ற அறிவிப்பு மூலம் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்படும் மக்கள், அதற்கான மருந்துகளை மிக குறைந்த விலையில் ஜென்ரிக் மருந்துகளாகப் பெற வழிவகை செய்துள்ளார். இதன் மூலம் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.
'முதலமைச்சரின் காக்கும் கரங்கள் திட்டம்' மூலம் முன்னாள் படை வீரர்கள் தொழில் துவங்க 1 கோடி ரூபாய் வரை வங்கிக் கடன் பெற வழிவகை செய்யப்படும். தியாகிகள் ஓய்வூதியம் 20 ஆயிரத்தில் இருந்து 21 ஆயிரமாகவும், அவர்களது குடும்பங்களுக்கான ஓய்வூதியம் 11 ஆயிரத்தில் இருந்து 11 ஆயிரத்து 500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் விடுதலை போராட்ட வீரர்கள் வழித்தோன்றல்களுக்கான ஓய்வூதியம் 10 ஆயிரம் என்பதை 10 ஆயிரத்து 500 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக மலை, நிலப் பகுதிகளில் இயற்கை இடர்பாடுகள் குறித்து முழுமையான ஆய்வு செய்யவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அரசின் சார்பில் ஆளுநர் அழைப்பை ஏற்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் முதலமைச்சரும், அமைச்சர்களும் பங்கேற்க உள்ளோம். ஆளுநர் நிலைப்பாடுகள் குறித்து அவ்வப்போது அமைச்சர்கள் பதில் அளித்து வருகிறோம். அரசியல் கருத்துக்கள் என்பது வேறு அரசின் நிலைப்பாடு வேறு.
ஆளுநரின் கருத்தியல் சார்பான விஷயங்களில் மாறுபட்ட கருத்துக்கள் திமுகவிற்கு உள்ளது. ஆனால் ஆளுநர் பதவி மீது முதலமைச்சர் மதிப்பு கொண்டுள்ளார். அவரின் பதவிப் பொறுப்பிற்கு மதிப்பு அளிக்கும் வகையில் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்கிறோம்.
இதையும் படிங்க: 'முதல்வர் மருந்தகம்' முதல் படை வீரர்களுக்கு ரூ.1 கோடி கடன் உதவி வரை.. சுதந்திர தின விழாவில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்!