செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில், புதிய காவல் நிலையம் கட்டும் பணி அடிக்கல் நாட்டு விழா இன்று (பிப். 5) நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேருந்து நிலையத்தில் காவல் நிலைய கட்டிடம் ரூ.14.30 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ளது.
நாளொன்றுக்கு ஒரு லட்சம் பயணிகள்: நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது, "கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு இன்றுடன் 36 நாள் நிறைவு பெற்றுள்ளது. அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் சரியான திட்டமிடல் இல்லை. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பல்வேறு புதிய பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நாளொன்றுக்கு ஒரு லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர்.
புதிய முறையில் காவல் நிலையம்: பொதுமக்களுக்கு பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தும் வகையில் புதிய காவல் நிலையத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்ததைத் தொடந்து, இன்று 14 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் காவல் நிலைய கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த காவல் நிலையம் காவலர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் புதிய முறையில் அமைக்கப்பட உள்ளது.
அடுத்த மாதத்திற்குள் முடிக்க திட்டம்: முடிச்சூரில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் 27.98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 120 ஆம்னி பேருந்துகள் (Idle Parking for Omni Buses) நிறுத்துமிட வசதிகளை ஏற்படுத்த கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இவ்விடத்தில் 300 பணியாளர்களுக்கான தங்குமிட வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் உணவகங்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணி அடுத்த மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
சலுகை விலைக்கு கடைகள்: கிளாம்பாக்கத்தில் மிக விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்பட்டு, விலை குறைவான தரமான உணவுகள் வழங்கப்படும். கோயம்பேட்டில் 32 கடைகள் பயன்பாட்டில் இருந்த நிலையில், கடைகளுக்கு மொத்தமாக உரிமையாளர்கள் 11 பேர் தான் இருந்தனர். அவர்களுக்கு மாற்று இடமாக கிளாம்பாக்கத்தில் கடைகளை சலுகை விலைக்கு அளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆம்னி பேருந்துகள் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவிற்கு ஏற்ப கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. நீதிமன்ற முடிவுக்கு பிறகு, துறை ரீதியாக முடிவு செய்யப்படும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 35 நாட்களுக்குள் 90 சதவீதம் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது" என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இதையும் படிங்க: "அமலாக்கத்துறைக்கு கதவை தட்ட வேண்டிய கஷ்டம் வேண்டாம்" - அண்ணாமலைக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி!