சென்னை: வடசென்னை மக்களின் வளர்ச்சிக்காக பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, பயன்படுத்தாத இடங்களை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் புதிய திட்டங்களை செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மேம்பாலம் அருகில் உள்ள பொதுப்பணித்துறை பழைய பணிமனை மற்றும் சென்னை, வால்டாக்ஸ் ரோடு, தண்ணீர் தொட்டி தெருவில் உள்ள பழைய பொது பண்டகசாலை ஆகிய பகுதிகளை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே. சேகர்பாபு கள ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது; வடசென்னை வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டோம். பயன்படுத்தாத இடங்களை மக்களுக்கு என்ன மாதிரியான பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாகவும் ஆய்வு நடத்தினோம்.
வடசென்னை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெறும்: வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகளில் 4,378 கோடி அளவில் திட்டங்களை செயல்படுத்த முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். அதில் 208 பணிகளில், 108 பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மீதமுள்ள 100 பணிகளை மேற்கொள்வதற்கான பணிகள் தொடர்ந்து அந்தந்த துறை சார்பாக நடந்து வருகிறது.
4,378 கோடி ரூபாயில், கிட்டத்தட்ட பெருநகர சென்னை வளர்ச்சி குழுமம் 1,619 கோடி ரூபாயை முதலமைச்சர் உத்தரவின் பேரில் பல்வேறு துறைகளில் வழங்கி இருக்கிறது. இந்த திட்டங்கள் நிறைவு பெறும்போது வடசென்னை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என தெரிவித்தார்.
பா. ரஞ்சித்: அதனை தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இயக்குனர் பா. ரஞ்சித் திமுகவுக்கு வாக்கு செலுத்துவதை குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அதுபற்றி சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, அமைச்சர் கேள்வியை சரியாக உணராதவாறு மீண்டும் கேட்க, குறுக்கிட்ட மேயர் பிரியா 'பா. ரஞ்சித்' என பெயரை கூறினார். அதற்கு அமைச்சர் சேகர்பாபு, இயக்குனர் ரஞ்சித் யார் என தெரியாது எனவும் அரசியல்வாதிகளை யாருன்னு கேட்டா தெரியும்.. அவரை யார் என்று தெரியாது என பதிலளித்தார். அமைச்சரின் இந்த பதில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை பெற்று வருகிறது.
இயேசு போல முதல்வர்: முன்னதாக, அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியை கொடுப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்தான கேள்விக்கு பதிலளித்த சேகர்பாபு, எடப்பாடி பழனிசாமியை மக்களே ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் துணை முதலமைச்சராக உதயநிதி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் என்ன? அம்மா உணவகம் அவர்கள் ஆட்சியில் செய்திருந்த ஒரு திட்டம்.. பட்டு போய் கெட்டுப் போய் விடக்கூடாது என்பதற்காக முதலமைச்சராக அதை கையில் எடுத்ததற்கு அவர் வரவேற்று இருக்க வேண்டும்.
அதை விட்டுவிட்டு வஞ்சக எண்ணத்தோடு குறுகிய புத்தியோடு அதை விமர்சனம் செய்வதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். முதல்வரை பொறுத்த வரை எதிரியாக இருந்தாலும், துரோகிகளாக இருந்தாலும் கருணை உள்ளத்தோடு ஏற்றுக் கொள்ளக் கூடியவர். இயேசு போல அனைவரையும் முதலமைச்சர் மன்னிக்கக்கூடியவர் என்றார்.
இந்த ஆய்வின் போது பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் பெருநகர சென்னை வளர்சசி குழும அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; கூலிப்படை புரோக்கர் ஹரிகரனை காவலில் எடுக்கப்போவதாக தகவல்!