சென்னை: திராவிட மண்ணில் மதத்தால், மொழியால், இனத்தால் பிளவு ஏற்படுத்தி அரசியல் செய்ய முடியாது. எங்கள் அரசியல் அனுபவ வயதை கூட பூர்த்தி செய்யாதவர் அண்ணாமலை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
வில்லிவாக்கத்தில் அகத்தீஸ்வரர் கோயில் ராஜகோபுரம் கட்டும் பணி துவக்க விழா மற்றும் பாலியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று (ஜனவரி 20) ஆய்வு செய்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது, “திமுக ஆட்சியில் தான் மொட்டை கோபுரங்கள் அனைத்தும் உயர் கோபுரங்களாக கட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 96 மொட்டை கோபுரங்களில் 31 உயர் கோபுரங்களாக மாற்றப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் 2,392 கோயில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டு உள்ளது. இன்று மட்டும் 14 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
தொடர்ந்து, ரூ.7 ஆயிரம் கோடி மதிப்புள்ள நில அபகரிப்பு மீட்கப்பட்டுள்ளது. இதில், நிலத்தை அபகரித்தவர்களில் 10 பேர் பாஜகவினர். எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில், ரூ.1000 கோடிக்கு மேல் உபயதாரர் நிதி வழங்கப்பட்டு முழுமையாக செலவு செய்யப்படுகிறது. திருச்செந்தூர் கோயிலுக்கு இன்று ஒரே நேரத்தில் ஏழு கோபுரங்களுக்கு பாலாலயம் நடைபெற்றுள்ளது.
வடமாநிலங்களில் நூறு கோடிக்கு மேல் கோயில்களுக்கு செலவு செய்வார்கள் என்கிற கருத்தை புரட்டிப் போடும் வகையில், திருச்செந்தூர் கோயிலுக்கு மட்டும் ரூ. 400 கோடி அளவில் திருப்பணியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை இருக்காது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “பாஜக ஆட்சி வரட்டும் பிறகு பார்க்கலாம் என்றும், அண்ணாமலை தலைவராக இருந்து தமிழக மண்ணில் எந்த இடத்தில் நின்றும் வெற்றி பெறவில்லை.
இதையும் படிங்க: 'எம்.ஜி.ஆர், ஜெயலலிதா-வுக்கு நாம் தான் வாரிசு'... சோழிங்கநல்லூர் பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு!
திமுக 40 தொகுதியிலும் மண்ணை கவ்வும் எனவும், குறிப்பாக கொங்கு மண்டலத்தில் டெபாசிட் இழுக்கும் என்று அண்ணாமலை தெரிவித்தார். ஆனால், 40 தொகுதிகளிலும் வென்று காட்டினோம். ஒன்றுமில்லா விஷயத்தை ஊதி பெருதாக்கினாலும் 2026ஆம் ஆண்டு மக்கள் சம்மட்டி அடி கொடுக்க தயாராக உள்ளனர். மக்கள் பிரதிநிதியாக கூட அண்ணாமலையால் வர முடியாது.
இது திராவிட மண். மதத்தால், மொழியால், இனத்தால் பிளவு ஏற்படுத்தி இங்கு அரசியல் செய்ய முடியாது. ஆணவத்துடன் செயல்படுவது அண்ணாமலை தான், நாங்கள் இல்லை. மிகுந்த அடக்கத்துடன் திராவிட மாடல் ஆட்சியில் எங்கள் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எங்கள் அரசியல் அனுபவ வயதை கூட பூர்த்தி செய்யாதவர் அண்ணாமலை” என்று கூறியுள்ளார்.
25 ஆண்டுக்கும் மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சர்:
தொடர்ந்து, 13 அமாவாசை தான் உள்ளது திமுகவிற்கு என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, “ஏற்கனவே, அவர் அதிரடிப்படை அமாவாசை என நிரூபித்தவர். எனவே, அமாவாசையயை எண்ணிக் கொண்டிருக்கிறார். ஆனால், முதலமைச்சர் மக்கள் நலனை எண்ணி பணியாற்றி வருகிறார். 2026ஆம் ஆண்டு தேர்தல் மட்டுமல்ல, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சராக அலங்கரிப்பார்” என பதில் அளித்துள்ளார்.
பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு குறித்த கேல்விக்கு, “பரந்தூருக்கு விஜய் செல்வது நல்லது” என்று பதில் அளித்துள்ளார்.