புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் இன்று வழங்கினர்.
தமிழ்தாய் வாழ்த்து இல்லாமல் நிகழ்ச்சி துவங்காது: இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில்,“ தமிழ் தாய் வாழ்த்தை திமுகாவை போல் யாரும் மதிப்பு தர முடியாது. நாங்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்காமல் எந்த அரசு நிகழ்ச்சியையும் துவங்குவதில்லை. இந்த விவகாரத்தில் ஆளுநர்தான் சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். அவர் சர்ச்சை ஆக்காமல் இருந்திருந்தால் இவ்வளவு பிரச்னைகள் ஏற்பட்டு இருக்காது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்வில் ஏற்பட்டது மைக் பிரச்சினை மெக்கானிக்கல் கோளாறு. இதை நாம் தவிர்க்க முடியாது.
சி.வி. சண்முகத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது நாங்கள் வழக்கு போட்டு அவரை பழிவாங்க வேண்டியதில்லை. ஏனென்றால் அவரை ஏற்கனவே அவரது கட்சிக்காரர்களை பழி வாங்கி வருகின்றனர். முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் நேற்று ஒற்றையாளாக போராட்டம் நடத்தியுள்ளார். அவருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்.
இதையும் படிங்க: மேஜிக் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தின் அபாயத்தை விளக்கும் விழிப்புணர்வு முகாம்!
விஜய் மாநாடு: வேலு நாச்சியாரையும், தந்தை பெரியாரையும், அண்ணாவையும் யார் ஏற்றுக்கொண்டாலும் திராவிடம் இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் அரசியல் செய்ய முடியாது. அண்ணா படத்தை நடிகர் விஜய் வைப்பதும் வைக்காததும் அவருடைய விருப்பம். தமிழக மக்களின் இதயத்தில் குடி கொண்டிருப்பவர் அண்ணா. விஜய் கட்டவுட் வைக்கவில்லை என்றாலும் அண்ணாவின் புகழை யாரும் மறக்க முடியாது. விஜய் அரசியல் குறித்து நான் பேச விரும்பவில்லை.
கூட்டணி முறிவு? எங்கள் கூட்டணிக்குள் எந்த பிரச்சனையும் இல்லை பிரச்சனையை உருவாக்க பத்திரிகையாளர்கள் முயற்சி செய்கின்றனர். அது நடக்காது. எங்களது கூட்டணியின் கான்கிரேட் வலிமையாக உள்ளது. எதை வைத்த உடைத்தாலும் உடைக்க முடியாது. யாரும் கவலைப்பட வேண்டாம் 2026 மீண்டும் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்