சென்னை: தவறான தகவல்களையும் தேவையற்ற கண்டனங்களையும் தெரிவிப்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வருவதாக , இச்சம்பவம் குறித்த முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளாமல் அவசரகதியில் வழக்கம்போல, X தளத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தி.குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 65). இவர், சாராயம் அருந்தி உடல்நிலை சரியில்லாமல் கடந்த 30 ஆம் தேதி இருவேல்பட்டு அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த 29 ஆம் தேதி பாண்டிச்சேரி மடுகரை அரசு சாராயக்கடையில், முருகன் என்பவர் 5 பாக்கெட்டுகள் சாராயம் வாங்கி 2 பாக்கெட்டுகளை தானே குடித்துவிட்டு, ஜெயராமன் என்பவருக்கு இரண்டு பாக்கெட்டுகளையும், சிவசந்திரன் என்பவருக்கு ஒரு பாக்கெட்டையும் கொடுத்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, முருகன் சாராயக்கடை சாராயப் பாக்கெட்டுகளை வாங்கியது உண்மை என்று தெரியவந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து, முருகன், ஜெயராமன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரை காவல்துறையினர் கடந்த 30 ஆம் தேதி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கச் செய்து மூவரின் இரத்த மாதிரிகளையும், விழுப்புரம் வட்டார தடய அறிவியல் ஆய்வத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்துள்ளனர். அதில் அவர்கள் அருந்தியது எத்தனால் (Ethanol) என்றும், மெத்தனால் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் முருகன், மற்றும் சிவசந்திரன் இருவரும் கடண்த 3 ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், ஜெயராமன் அதிக அளவு மதுப்பழக்கம் உள்ளவர் என்றும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (வியாழக்கிழமை) உடல்நலக்குறைவால் ஜெயராமன் உயிரிழந்துள்ளார் என்று விழுப்புரம் ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, புதுச்சேரியில் இருந்து சட்டவிரோதமாக சாராயப் பாக்கெட்டுகளை வாங்கி வந்த முருகன் என்பவர் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், இதனை சரிபார்க்காமல், இச்சம்பவத்தை கள்ளச்சாரய மரணம் என்று கூறி இறப்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசியல் ஆதாயம் தேடுகிறார்.
எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகன சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி சாராயக் கடத்தலைத் தடுப்பதற்கு தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளில் ரோந்துப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. உள்ளூர் காவல் துறையினர் எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். எனவே, இந்த உயிரிழப்பு கள்ளச்சாராயத்தால் நிகழவில்லை” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்தவர் பலி.. இருவருக்கு தீவிர சிகிச்சை.. போலீஸ் தீவிர விசாரணை!