புதுச்சேரி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன்படி, தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர் பட்டியலை அனைத்து கட்சியினரும் வெளியிட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தென் சென்னையில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடுகின்றனர் என பாஜக போட்டியிடவுள்ள தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று (மார்ச்.21) வெளியானது.
இந்நிலையில், இன்று 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த ஆ. நமச்சிவாயம்?: புதுச்சேரியில், அமரர் ஆறுமுகம் - அமரர் செந்தாமரை தம்பதியினருக்கு 1969 ஆண்டு பிறந்தவர் ஆ. நமச்சிவாயம். கட்டட பொறியியல் பட்டப்படிப்பு படித்த இவர், 11 வது சட்டப்பேரவையில் வேளாண் அமைச்சராகவும், 12வது சட்டப்பேரவையில் முதலமைச்சரின் நாடாளுமன்றச் செயலர் மற்றும் பொது சுகாதார அமைச்சராக பதவி வகித்தார். பின்னர், 13வது சட்டப்பேரவையில் உறுப்பினராகவும், 14வது சட்டபேரவையில் பொதுப்பணி அமைச்சராக பதவி வகித்தார்.
15 வது சட்டப்பேரவையில் உள்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் புதுச்சேரி பாஜக வேட்பாளரக நமச்சிவாயத்தை அதகாரப்பூர்வமாக பாஜக தலைமை அறிவித்துள்ளது. மேலும், தேர்தலில் நிற்பதற்காக விரைவில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: "கேத்தன் தேசாயின்னா யாரு தெரியுமா? அதற்காகத் தான் பாமக கூட்டணி" - மாஜி அமைச்சர் ஓ.எஸ் மணியன் சாடல்! - Lok Sabha Election