கோயம்புத்தூர்: பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பாக பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மற்றும் ஓடையகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பாறைப்பதி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
இந்த கனமழை காரணமாக, அப்பகுதியில் பயிரிடப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட வாழைத் தோட்டங்களை ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
உத்தரவின் பேரில், இன்று (புதன்கிழமை) வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, ஓடையகுளம் பகுதியில் பாதிக்கப்பட்ட வாழைத் தோட்டங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் முத்துசாமி கூறுகையில், “இந்த பகுதியில் பெரிய அளவில் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளது.
தென்னை மரங்களும் இப்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். எனவே, வேளாண்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் குறித்து ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அறிக்கை சமர்பித்த பிறகு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வாழைப் பயிர்களுக்கு இன்சூரன்ஸ் பெறுவதில் உள்ள சிக்கல்களை களைந்து, அதிகாரிகளுடன் பேசி இன்சூரன்ஸ் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆழியார் பாலம் பகுதியில் மிகப்பெரிய அளவில் ஆகாயத்தாமரை வளர்ந்து தன்ணீர் போக முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில், கழிவுநீர் கலப்பதை தடுத்து, அதற்கு நிரந்தரத் தீர்வுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வருகிற ஜூன் 4ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை முறைகள் அமலில் இருப்பதால், தற்போது இது குறித்த மனுக்கள் நிர்வாகத்தின் மூலமாக மாட்ட ஆட்சியரிடம் வழங்கப்படுகிறது” இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, வேட்டைக்காரன் புதூரைச் சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணியம் கொடுத்த மனுவை அமைச்சர் முத்துசாமி பெற்றுக் கொண்டார். அந்த மனுவில், “தனது தோட்டத்தில் தென்னை மரங்களும், வாழையும் பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் நிலவிய வறட்சியின் காரணமாக போர்வெல் வற்றியதால், நகைகளை அடமானம் வைத்து வாழையைக் காப்பாற்ற ஆறு மாதமாக ஒரு டிராக்டர் ரூ.2,500-க்கு தண்ணீர் விலை கொடுத்து வாங்கி வாழை பயிரிட்டோம்.
ஆனால், வாழை வெட்டும் தருவாயில், சூறைக்காற்றுடன் பெய்த கனமழையில் மரங்கள் சாய்ந்து விட்டது. இதற்கு ரூ.4 லட்சத்திற்கும் மேல் செலவழித்துள்ளோம். இது குறித்து தோட்டக்கலை முதல் கிராம நிர்வாக அலுவலர் வரை நேரில் ஆய்வு செய்து விட்டனர். எனவே, தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
மேலும், இந்தியாவில் பல மாநிலங்களில் தென்னையில் கள்ளு இறக்க அம்மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளது. அதன் மூலமாக ஒரு வருடத்திற்கு ரூ.15 ஆயிரம் குத்தகையாக கிடைக்கிறது. தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு குத்தகை ஒரு மரத்திற்கு ரூ.600 கிடைக்கிறது. ஆகவே, விவசாயிகளின் வாழ்வாதாரம் காத்திட, கள்ளு இறக்க அனுமதி வழங்க வேண்டும்” இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, “விவசாயிகளைப் பாதிக்க வேண்டும் என்பதற்காக செய்யவில்லை. எல்லாம் கொள்கை முடிவு. இது பெரிய ஆலோசனையில் சென்று கொண்டிருக்கிறது” என்றார். இந்த ஆய்வில், மாவட்டச் செயலாளர் முருகேசன், ஆனைமலை பேரூராட்சி கலைச்செவ்வி, ஒன்றிய செயலாளார்கள், தேவ சேனாதிபதி, யுவராஜ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் சாந்தலிங்க குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: “பெண் காவலர்கள் தாக்கினார்களா?”.. நீதிமன்றத்தில் முறையிட்ட சவுக்கு சங்கர்! - Savukku Shankar Assaulted