சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் 1,477 பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 7 நபர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
இதில் பேசிய அவர், “தற்போது 946 மருந்தாளுநர் பணியிடங்களும், 553 உதவியாளர் பணியிடங்கள், 5 தொழில்வழிகாட்டி ஆலோசகர் பணியிடங்கள் என 1,477 பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மருந்தாளுநர்களைப் பொறுத்தவரை, மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, தேர்வுகள் நடத்தி, சான்றிதழ்கள் சரிபார்ப்புகள் நடத்தி பல்வேறு நீதிமன்ற வழக்குகளைக் கடந்து பணி நியமன ஆணைகள் தரப்பட்டுள்ளது.
பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு அவரவர் சொந்த பகுதிகளிலேயே பணிநியமனம் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் கொள்கை. ஆனால், அவர்கள் சொந்தப் பகுதியில் காலியிடம் இல்லாத பட்சத்தில், கிடைக்கும் இடங்களுக்கு பணி நியமனம் பெற்றுச் செல்ல வேண்டும்.
இடமாறுதல்கள் துறைத் தலைவர்கள் மூலமாகத்தான் இடமாற்றம் வேண்டி கடிதம் தரப்பட வேண்டும். யாரும் நேரடியாக அமைச்சரிடம் வரக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பியிருக்கின்றனர். பலர் எங்களுக்கு தெரிந்தவர்கள் உடன் வந்து இடமாற்றம் கோரி நெருக்கடி தருகிறீர்கள். இனி அவ்வாறு செய்பவர்கள் மீது 17(b) போன்ற துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மேலும், மருத்துவத்துறை இயக்குனர்களிடம் காலிப்பணியிடம் விவரம் கோரப்பட்டுள்ளது. இதில் 95 சதவீதம் பணியிடங்கள் நிரப்பப்பட்ட பிறகு, மீண்டும் உங்களுக்கு கலந்தாய்வு நடத்தி நீங்கள் விரும்பும் இடங்களுக்குச் செல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறோம். அதுவரை நீங்கள் யாரும் பணியிட மாறுதல் கேட்க வேண்டாம்.
இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 4,215 பணியிடங்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 1,055 என மொத்தம் 5,670 பேருக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், இன்று புதிதாக 1,477 பேர் என இதுவரை வெளிப்படையான கலந்தாய்வின் அடிப்படையில் 36,465 பேருக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது.
1,066 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளது. ஆனால், இப்பணிகளுக்கு நீதிமன்றத்தில் இதுவரை 38 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், 2,250 கிராம சுகாதார செவிலியர்கள் பணியிடங்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் 6 வழக்குகள் உள்ளது.
அந்த 6 வழக்குகளுக்கு தீர்வு கிடைத்துவிட்டால் 2,250 பெண்களின் வாழ்வில் விளக்கேற்றி வைக்கப்படும். மேலும், இந்த ஆண்டிற்கான 2,553 மருத்துவர்களுக்கான விண்ணப்பங்கள் அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு தேர்வுகள் நடத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனப் பேசினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: மருத்துவப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது; ஆக.21 முதல் கலந்தாய்வு தொடக்கம்!