வேலூர் : வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வந்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் உள்ள மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் மருத்துவ வசதிக்காக ஆம்புலன்ஸ் சென்றுவர மிகவும் சிரமமாக இருப்பதால் மலைவாழ் பகுதிகளுக்கு இரண்டு சக்கர ஆம்புலன்ஸ் திட்டம் வருகின்ற நவ 8ம் தேதி முதல் தொடங்கி வைக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 25 இடங்களில் இரண்டு சக்கர ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படும். நவம்பர் 8ம் தேதி ஜவ்வாது மலையில் இருந்து தொடங்கி வைக்கப்படும். மலைவாழ் மக்களின் வசதிக்காக நிதிநிலை அறிக்கையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தது போல் மலைவாழ் மக்களின் சுகாதார மேம்பாட்டிற்காக இந்த இரண்டு சக்கர ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்படுகிறது.
மேலும், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் பல கோடி ரூபாய் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனைகளில் இறுதி கட்ட சாதனங்கள் பொருத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க : சாம்சங்.. அடுத்தது என்ன? அனைத்து பேரவை சங்கங்களுக்கும் சிஐடியு அழைப்பு!
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இரண்டு, மூன்று மாதங்களில் அந்த பணிகள் நிறைவு பெறும். இந்த மருத்துவமனை கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். அதேபோல் வேலூர் மாவட்டத்தில் ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றது.
குடியாத்தம் அடுத்த கூடநகரம் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் பழுதடைந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டில் நிதிநிலை அறிக்கையில் கூடநகரம் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் 1,021 மருத்துவர்களும், 977 நர்ஸ்களும், 946 மருந்தாளர்களும், 526 உதவியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். படிப்படியாக காலிப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.
போலி மருத்துவர்கள் அதிகம் உருவாகி வருகின்றனர் என்ற கேள்விக்கு, எங்கே என்ற விவரங்கள் சொல்லுங்கள் என்றும், உங்கள் பெயர் சொல்ல மாட்டேன்” என்றும் நகைச்சுவையாக பேசி சென்றார்.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/20-10-2024/22723499_whatsup.jpg)
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்