சென்னை: சென்னை, கிண்டி, லேபர் காலனி பகுதியில் அரிமா சங்கம் மற்றும் சென்னை அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச இதயம் மற்றும் பொது மருத்துவப் பரிசோதனை முகாமினை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழக அரசும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துகின்றன.
தமிழ்நாட்டில் எங்கெல்லாம் காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்படுகிறதோ, குறிப்பாக ஒரு தெருவிலோ அல்லது ஒரு ஊரிலோ ஒன்றுக்கும் மேற்பட்ட காய்ச்சல் பாதிப்புகள் இருக்குமானால் உடனடியாக அங்கே மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிட்டப்பட்டுள்ளது.
அந்த வகையில், மருத்துவ முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், கிண்டி லேபர் காலனியில் உள்ள அரிமா சங்க பள்ளி வளாகத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இருதய பரிசோதனை முகாமில் மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறுவதும், ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, இசிஜி, எக்கோ போன்ற பல்வேறு பரிசோதனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க : மழை எப்போது பெய்யும்? இனி கையிலே அப்டேட் இருக்கு.. தமிழக அரசின் TN-Alert செயலி அறிமுகம்!
மழைக்காலம் என்பதால் மருத்துவ முகாம்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. டெங்கு பாதிப்பு தமிழ்நாட்டில் கட்டுக்குள் இருக்கிறது. டெங்கு இறப்புகள் 7 என்கின்ற வகையில் இருக்கின்றது. இந்த 7 இறப்புகளும் குறித்த காலத்தில் மருத்துவர்களை அணுகாமல் இருந்திருப்பது, காய்ச்சல் வந்தபிறகு மருத்துவமனைக்கு செல்லாமல் தாங்களே சிகிச்சைகள் செய்திருப்பது போன்ற காரணங்களினால் தான் 7 இறப்புகள் ஏற்பட்டிருக்கிறது.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் காய்ச்சிய நீரையே பருக வேண்டும். வீடுகளை ஒட்டி உள்ள மழைநீர் தேக்கத்தை சுத்தமாக தவிர்க்க வேண்டும், வீடுகளில் உள்ள தேவையற்ற பொருட்களில் தேங்கி இருக்கின்ற நீரை உலர்த்தி வைக்க வேண்டும். வீடுகளில் குடம் அல்லது தொட்டிகளில் பிடித்து வைக்கப்படும் நீரை துணி கொண்டு மூடி வைக்க வேண்டும்.
கொசு உற்பத்தியை பெருக்குவதை தடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் 1000 இடங்களில் வரும் 15ம் தேதி மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். சென்னையில் மட்டும் 100 இடங்களிலும், மற்ற 37 வருவாய் மாவட்டங்களில் 900 இடங்கள் என்கின்ற வகையில் 1000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்