கோயம்புத்தூர்: கோவை விமான நிலையத்தில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (பிப். 4) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பிப்.6 ஆம் தேதி தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 1,021 மருத்துவர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.
தமிழக மருத்துவத் துறை வரலாற்றில் மட்டுமல்லாது இந்திய மருத்துவத்துறை வரலாற்றில் முதன்முறையாக புதிய தேர்வாளர்களுக்கு கலந்தாய்வு என்பது இதுவே முதல் முறை. தமிழகத்தில் 20 மருத்துவ மாவட்டங்களில் எங்கே எல்லாம் அதிக காலிப்பணியிடங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த மருத்துவர்களை பணியில் அமர்த்திட வேண்டும் என்ற அடிப்படையில் கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது.
தேர்வாகியுள்ள 1,021 பேருக்கும் 20 மாவட்டங்களில் காலி பணியிடங்கள் என்று கண்டறியப்பட்ட 1,127 இடங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளன. பணியிடங்களில் நியமிக்கும் வகையிலான கவுன்சிலிங் இரண்டு நாட்களாக நடைபெற்று கொண்டிருக்கிறது. நாளை மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அவர்களுக்கான பணி அணைகள் வழங்கப்பட உள்ளன.
இதேபோல் மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மருந்தாளுனர்களுக்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அவர்கள் கொரோனா காலகட்டத்திற்கான மெரிட் மதிப்பெண்கள் கேட்டுள்ளதால் அதற்காக அஃபிடவிட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மருந்தாளுநர்கள் கரோனா காலத்தில் வெளியில் இருந்து பணியாற்றாதவர்கள் என்பதால் அவர்களுக்கு மெரிட் மதிப்பெண் கொடுத்தால் அது அநீதியாக மாறிவிடும் என்பதற்காகவே நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்பிரச்சினை முடிந்தவுடன் இதற்கான பட்டியலும் வெளியிடப்படும்.
2,300 செவிலியர்கள் எம்ஆர்பி மூலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டவர்கள். சுகாதாரத்துறையில் காலிப்பணியிடங்கள் உருவாக உருவாக அப்பணியிடங்களில் அவர்களை கொண்டு நிரப்பப்படும். ஒருவர் கூட விட்டுப் போக கூடாது என முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி எம்ஆர்பி.யில் சேர்ந்தவர்கள் என்பதற்காக காலி பணியிடங்கள் உருவாகும் போது அவர்கள் பணியில் சேர்த்துக் கொல்லப்படுவார்கள்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூடுதல் கட்டிட பணிகள் இன்னும் முடியாத நிலையில் பொதுப்பணித்துறையினர் ஒரு மாத காலம் அவகாசம் கேட்டுள்ளனர். அந்த பணிகள் முடிந்தவுடன் புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாம் தமிழர் கட்சி நாட்டுக்கு எதிராக செயல்படுகிறது - எல்.முருகன் குற்றச்சாட்டு!