தஞ்சாவூர்: கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி 170 ஆண்டு கால பழமையான கல்லூரியாகும். இந்த கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் முன்னாள் மாணவரும், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சருமான கோவி செழியன் சிறப்பு விருந்தனராக கலந்துகொண்டார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் 2021 - 2022 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 1,487 மாணவ மாணவியர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. முன்னதாக பட்டமளிப்பு விழாவிற்கு அமைச்சர் கோவி செழியன் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்த நிலையில் கல்லூரி முதல்வர் அறையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "மத்திய அரசு 2030ல் இந்தியா முழுவதும் உயர்கல்வியை 50 சதவீதமாக உயர்த்திட தேசிய கல்வி கொள்கை அமல் செய்து வருகிறது. ஆனால் தேசிய கல்வி கொள்கை இல்லாமலேயே சமசீர் கல்வியின் மூலம் தமிழகம் உயர்கல்வியில் 54 சதவீதம் பெற்றுள்ளது. எனவே கல்வியில் தமிழகத்திற்கு எது தேவை, எது தேவையில்லை என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார்" என்றார்.
இதையும் படிங்க: பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: துணைவேந்தர் மீது ஆசிரியர் சங்கம் பகீர் குற்றச்சாட்டு!
பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை சேர்ந்த 110 பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து போராட்டம் நடத்தி வருவது குறித்த கேள்விக்கு அமைச்சர், "இப்போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் நிதித்துறை செயலாளர் போராட்டக்குழு நிர்வாகிகளிடம் தொடர்ந்து பேசுவார்த்தை நடத்தி வருகின்றனர். எனவே இன்றுக்குள் சுமூக முடிவு எட்டப்பட வாய்ப்புள்ளது. விரைவில் மாநிலம் முழுவதும் நிரந்தர பேராசிரியர்களாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரப்பபடவுள்ளனர்" என தெரிவித்தார்.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/19-10-2024/22714880_wats.jpg)
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.