மதுரை: இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழ்நாடு மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவது பற்றியும், அவர்களை மீட்கவும், அவர்கள் மீதான வன்முறை பிரயோகத்தை தடுக்கவும் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்னவென்று, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் (சி.பி.எம்) எழுப்பிய கேள்விக்கு, (எண் 44/02.02.2024) வெளியுறவு இணை அமைச்சர் வி. முரளிதரன் பதில் அளித்துள்ளார்.
அதன்படி, "பாஜக ஆட்சியில் உள்ள 2014 - 2024 காலகட்டத்தில் 3 ஆயிரத்து 137 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். 2004 - 2013 காலத்தில் 2 ஆயிரத்து 915 பேரும், வாஜ்பாய் ஆட்சியில் இருந்த 2003ஆம் ஆண்டில் 606 பேர் சிறை பிடிக்கப்பட்டனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்திய மீனவர்கள் மீது 13 தாக்குதல்களை அண்டை நாடுகளின் கடற்படைகள் தொடுத்துள்ளன. அண்டை நாட்டு சிறைகளில் விடுவிக்கப்படாமல் தற்போது இருப்பவர்கள் 266 பேர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, "2005ஆம் ஆண்டில் மட்டும் ஒரு தாக்குதல் மற்றும் கைதுகூட இல்லை. கைது, தாக்குதல் பற்றிய தகவல் வந்தவுடன், இந்திய அரசு ராஜீய உறவுகள் வாயிலாக தொடர்பு கொண்டு விடுவிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தூதரகப் பணியாளர்கள், சிறைகளுக்குச் சென்று கைதிகளின் பாதுகாப்பு மற்றும் நலம் விசாரிக்கப்படுகின்றன. அவர்களுக்கான சட்ட உதவிகள் செய்யப்படுகின்றன. இரு தரப்பு தீர்வு முறைமைகள் உள்ளன. மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் பலவந்தம் இல்லாமல் அணுகுமாறு, அண்டை நாடுகளின் அரசுகளை கேட்டுக் கொள்ளப்படுகின்றன" என்றும் அமைச்சர் பதிலில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியிருப்பதாவது, "அரசு புள்ளி விவரங்களையும், வழக்கம் போல அலுவல் ரீதியான வார்த்தைகளை மட்டுமே பிரகியோகித்துள்ளது. அரசியல் உறுதியுடன் நடவடிக்கை தேவைப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் காலத்தை விட, பாஜக ஆட்சியில் கைதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது வருந்தத்தக்கது. ஆகவே, இரு தரப்பு ஒப்பந்தம் உணர்வுப்பூர்வமாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஶ்ரீகம்பகரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்; தரிசனத்திற்கு வந்த ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டிய மார்க்சிஸ்ட் கட்சியினர்!