சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நடைப்பெற உள்ள விமான சாகச ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பார்வையாளர்கள் அனைவருக்கும் விமானப்படை மூலம் கேப் (cap) வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் வருகின்ற 6ஆம் தேதி இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவையொட்டி விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. சென்னையில் சுமார் 21 ஆண்டுக்கு பிறகு நடைபெறும் இந்த சாகச நிகழ்ச்சியில், 15 லட்சம் பேர் கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (அக்.3) மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, "15 லட்சம் பேர் இந்த விமான சாகச நிகழ்ச்சிகளை மெரினா கடற்கரையில் பார்க்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகமாக கூடுவதால் பாதுகாப்பிற்காக 20 தீயணைப்பு வண்டிகள், 20 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழு அமைக்கப்பட உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர், தமிழக முதலமைச்சர் தமிழக ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் அமர்ந்து பார்ப்பதற்காக கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்திய விமான படையின் ஆண்டு விழா ஒன்றிய அரசின் நிகழ்ச்சியாக இருந்தாலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், மருத்துவ வசதி, பாதுகாப்பு உள்ளிட்டவைகள் சிறப்பாக செய்யப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் தெரிவித்ததன் அடிப்படையில், தற்போது அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால், சாகச நிகழ்ச்சியைக் காண வரும் பொதுமக்கள் அனைவருக்கும் விமானப்படை மூலம் கேப் வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்