வேலூர் : வேலூர் மாவட்டம், பொன்னை அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், இன்று 209 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், "தமிழகத்தில் கல்விக்காக கோடிக்கணக்கான நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதனை பயன்படுத்தி மாணவர்கள் நன்கு பயின்று பல துறைகளில் முன்னேற்றம் காண வேண்டும். அரசு சுகாதாரம், சாலை, பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கிறது. அதனால் மாணவர்கள் இவற்றையெல்லாம் பயன்படுத்திக் கொண்டு படிப்பதில் அதிக ஆர்வம் செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் கல்விக்காக அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதால் தான் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பல துறைகளில் சிறந்து விளங்கி, இன்றைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகளில் கட்டடங்கள், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாணவர்களைக் கவரும் வகையில் இருந்தால் தான், மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு ஆர்வமாக இருப்பார்கள்.
இதையும் படிங்க : அழுகிய முட்டைகளால் 215 கிலோ கேக்.. 8 ஆயிரம் முட்டைகள் அழிப்பு.. திருச்சியில் அதிர்ச்சி!
பள்ளி கட்டடங்கள் சேதம் ஏற்பட்டு இருந்தால் மாணவர்கள் வருவதற்கு தயங்குவார்கள். பல பகுதிகளில் பள்ளி கட்டடங்கள் தேவைப்படுவதாக கூறுகிறார்கள். எனவே, அப்படி கேட்பவர்கள் மட்டுமே பெறுகிறார்கள். அழுகிற குழந்தை தான் பால் குடிக்கும் என்பதை போல கேட்டால் தான் கிடைக்கும்.
நான் கூட கல்லூரியில் பயிலும் பொழுது, கட்டடங்களைப் பார்த்து மயங்கி காதலித்து தான் கல்லூரிக்குச் சென்றேன். எனவே, அந்தந்த பகுதியில் உள்ளவர்கள் பள்ளி கட்டடங்களை மேம்படுத்த எங்களை நெருக்க வேண்டும். அப்படி செய்தால் உடனடியாக அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்