வேலூர்: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (பிப்.15) நடைபெற்றது. இதில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று, 514 நபர்களுக்கு மூன்று கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்பொழுது பேசிய அமைச்சர், "அரசின் திட்டங்கள் மக்களுக்கு இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாகச் சென்றடையும் வகையில், மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்கள் தொடர்ச்சியாக பல பகுதிகளில் நிறைவேற்றப்பட்டு வருவதால், தமிழகம் வளர்ச்சி அடைந்த மாநிலமாக உயர்ந்துள்ளது.
ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து அரசுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதால், தகுதியான பயனாளிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம்" என்று கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பத்திரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி, உச்ச நீதிமன்ற அமர்வு ரத்து செய்துள்ளது வரவேற்கத்தக்கது.
இதனை பலர் தவறாக பயன்படுத்தினர். காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் போதிய நிதி ஒதுக்காமல், டெண்டரை விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். ஆனால், நாங்கள் அந்தத் திட்டத்திற்கு தற்போது நிதியை ஒதுக்கி, அந்த திட்டத்தினை செயல்படுத்தி வருகிறோம்" என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வேனுகோபால் மறைவு வேதனை அளிப்பதாகவும், தொடர்ந்து 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராக எந்த குற்றச்சாட்டிற்கும் ஆளாகாமல் இருந்த அவரின் மறைவு கட்சிக்கு பேரிழப்பு என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "எடப்பாடி பழனிசாமி திமுகவின் ஊதுகுழல்" - ஓபிஎஸ் கடும் விமர்சனம்