வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் இன்று (செப்.09) 600 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வங்கிக் கடனை மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். இதன் தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் துரைமுருகன் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "பெண்கள் ஆளுமையில் சிறந்தவர்கள், அதன் காரணமாகத்தான் தமிழக அரசு பெண்களுக்கு அதிக அளவில் வங்கிக் கடனை வழங்கி வருவது. பெண்கள் குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைத்து நாட்டில் நல்ல குடிமகனாக வளர்க்கக்கூடியவர்கள். எனவே பெண்களுக்கு பொருளாதாரம் இருந்தால் குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பார்கள். எனவேதான் பெண்களுக்கு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக கோடிக்கணக்கான ரூபாய் வங்கிக் கடனாக வழங்கப்பட்டு வருகிறது.
பெண்களுக்கு கல்வி முக்கியம் என்பதை அறிந்து தமிழக அரசு பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, நாடாளுமன்றத்திலும் மற்றும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பெண்கள் இந்த நாட்டின் கண்கள். அவர்களின் முன்னேற்றம் முக்கியம். தேர்தல் என்பது வரும் போகும். ஆனால், மக்கள் பணி தான் முக்கியம் என்பதை உணர்ந்து இந்த அரசு பெண்களுக்காக பல நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது" என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்துக்கு நிதி வழங்கப்படவில்லையா? முதல்வரின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்!