வேலூர்: தொழிலதிபர் சேகர் ரெட்டியின் தந்தை ஜெகநாதன் ரெட்டி கடந்த ஜூலை 11ஆம் தேதி உயிரிழந்த நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள சேகர் ரெட்டியின் இல்லத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இன்று (சனிக்கிழமை) நேரில் சென்று ஜெகநாதன் ரெட்டி திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் துரைமுருகனிடம், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க உள்ளதாக தகவல் வெளியாவது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “அங்கெங்கும் இல்லாத படி எங்கும் ஒலிக்கிறது குரல். முடிவு எடுக்க வேண்டியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என்றார்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வந்தால் தங்களின் நிலைப்பாடு என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “நான் முறையாக கட்சியில் வளர்ந்தவன். கட்சி சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவர். என்னுடைய தனிப்பட்ட முறையைக் காட்டிலும், கட்சியின் நோக்கம், பலம் என்பது முக்கியமானதாகும். 60 ஆண்டுகள் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். என் மகிழ்ச்சி, என்னுடைய குடும்ப மகழ்ச்சியை விட கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். எனவே, கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதன்படி நடப்பேன்” என்றார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் ஆளுநராக அவரே நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறித்த கேள்விக்கு, “அதைப் பற்றி எல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது. இது குறித்து அவங்க கட்சி தான் முடிவெடுப்பாங்க” என்றார்.
தொடர்ந்து காவிரி ஆற்றிn தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 61 ஆயிரம் கன அடி அதிகரித்துள்ள நிலையில், இது டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு போதுமானதாக இருக்குமா என்ற கேள்விக்கு, “மொத்தத்தில் 60 அடி தான் வந்திருக்கிறது. சில நேரங்களில் நீர் அதிகரித்து திடீரென்று குறைந்து விடும். எனவே, அதன் நிலையைப் பொறுத்துதான் பார்க்க வேண்டும்” என்றார்.
மேலும், மழைக்காலங்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் நீர்நிலைகள் எந்த அளவுக்கு தூர்வாரப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு, " சென்னையில் அனைத்து பணிகளையும் நிறைவேற்றி இருக்கிறோம். தமிழகத்தில் திருநெல்வேலி, மற்ற இடங்கள் மற்றும் இயற்கையாக பெறும் மழையில் பாதிக்கப்பட்ட இடங்களை சீர் செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது” இவ்வாறு அவர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: துணை முதலமைச்சர் பதவியா? - அமைச்சர் உதயநிதி பளீச் பதில் - MINISTER UDHAYANIDHI STALIN