திருப்பத்தூர்: நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் வெற்றி பெற்ற நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக, திமுக கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி கூறும் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர். அப்பொழுது திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற கதிர் ஆனந்திற்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அப்போது பேசிய கதிர் ஆனந்த், "தாய் வீட்டு சீதனம் போல் அன்பும், அரவணைப்பும் எப்போதும் கிடைக்கிறது. வாணியம்பாடி தொகுதிக்கு நான் கொடுத்த வாக்குறுதியையெல்லாம், எவ்வளவு விரைவாக செய்ய முடியுமோ, அவ்வளவு விரைவாக செய்து முடிக்கின்றேன்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து துரைமுருகன் பேசுகையில், "கடந்த முறை கதிர் ஆனந்த் வெற்றி பெற வாணியம்பாடி தான் பங்களித்தது. இந்த தேர்தலிலும் ஆறு தொகுதிகளில் கதிர் ஆனந்திற்கு அதிக வாக்கு பெற்ற தொகுதி வாணியம்பாடி தொகுதி தான். என்னிடம் எல்லோரும் கூறினார்கள், வாணியம்பாடி இந்த முறை கைகொடுக்காது என்று நான் வாணியம்பாடியில் படித்தவன், எனக்கு ஓரளவிற்கு இந்த தொகுதி பற்றி தெரியும். இந்த தொகுதியில் வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி. இந்த தொகுதியில் பெரும் பிரச்னையாக இருப்பது ரயில்வே மேம்பாலம் அமைப்பதுதான். இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்படும் போதுதான் நான் கதிர் ஆனந்தை வாழ்த்துவேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "எனது மகன் என்பதற்காக அல்ல, திமுகவின் பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் ஆணையிடுகிறேன், உங்களை தேர்ந்தெடுத்த மக்களை அடிக்கடி சந்திக்க வேண்டும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது பொதுமக்களின் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்.
நான் எப்படி 13 முறை ஒரே தொகுதியில் எம்ஏல்ஏவாக வெற்றி பெற்றேன் என்ற ரகசியம் கதிர் ஆனந்திற்கு தெரியும். எனவே, அந்த ரகசியத்தை கடைபிடிக்க வேண்டும் என கதிர் ஆனந்திற்கு ஆணையிடுகிறேன்" எனப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அண்ணாமலை அன்று கேட்ட கேள்வி.. வெற்றிக்குப் பிறகு கனிமொழி கொடுத்த நச் பதில்!