வேலூர்: வேலூர் மாவட்டம் மேல்பாடி அருகே பொன்னையாற்றின் குறுக்கே ரூ.12.94 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தை, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (மார்ச் 16) திறந்து வைத்தார். பின்னர், நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது, “மேல்பாடி பகுதியில் தரைப்பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பாக மூன்று கோடி மதிப்பில் கட்டப்பட்டது. வெள்ளத்தின் காரணமாக பாலம் உடைந்து போனது. அதன் பிறகு ரூ.12.94 கோடி மதிப்பீட்டில் தற்பொழுது கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் மிகவும் பலம் வாய்ந்தது. இந்த பகுதியில் உள்ள சாலை பணிகள் தேர்தல் முடிந்தவுடன் சரி செய்யப்படும்.
சங்க காலத்தில் அகோரி பிரிவைச் சேர்ந்தவர்களின் தலமை இடமாக மேல்பாடி இருந்துள்ளது. இங்கு சோழர் காலத்து கோயில் மற்றும் மிகப்பெரிய சமாதி உள்ளது. இங்குள்ள சோமநாதீஸ்வரர் கோயில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. விரைவில் மத்திய அரசிடம் அனுமதி பெற்று, மிகப்பெரிய அளவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். மேலும், இப்பகுதியில் பக்தர்களின் வசதிக்காக விடுதிகள் கட்டப்பட்டு, மூன்று மாத காலத்திற்குள் இதனை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், திமுகவும், காங்கிரஸும் ஊழல் கூட்டணி, அதை வீழ்த்துவதுதான் என்னுடைய முழு முயற்சி என பிரதமர் மோடி கூறியிருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “பிரதமர் என்பவர் எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், நம்முடைய மதிப்பிற்குரியவர், சாலச் சிறந்தவர். மிகப்பெரிய இடத்தில் இருப்பவர் இப்படிப்பட்ட சிறிய வார்த்தைகளை கூறியிருப்பது அவ்வளவு பெரியவருக்கு அழகல்ல” என்றார்.
தேர்தல் பத்திரம் விவகாரத்தில், வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதற்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளது குறித்து செய்தியாளர் கேட்டதற்கு, “அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை" எனக் கூறினார்.
இதையும் படிங்க: 7 கட்டங்களாக நடக்கிறது நாடாளுமன்ற தேர்தல்.. தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு எப்போது?