தூத்துக்குடி: தூத்துக்குடி, புதூர் பாண்டியாபுரம் பகுதியில் மீன்களை பதப்படுத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிலா சீ புட்ஸ் (Nila Sea Foods) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதி மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு ஆலையில் மின்கசிவு ஏற்பட்டு அமோனியா கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதன் காரணமாக மீன் பதனிடும் நிறுவனம் முழுவதும் அமோனியா வாயு பரவியுள்ளது. இதில், பணியில் இருந்த ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளனர்.
உடனடியாக மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் மனோ பிரசன்னா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு தீயை அணைத்தனர். இதனையடுத்து, இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக தாளமுத்து நகர் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், மாசு கட்டுப்பாட்டு பொறியாளர் முரளி தலைமையிலான அதிகாரிகள், தடய அறிவியல் உதவி இயக்குனர் கலா லட்சுமி தலைமையிலான கைரேகை நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர் தேவ சுந்தரம், ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ் ஆகியோர் இன்று காலை ஆய்வு மேற்கொண்டனர்.
தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களை அமைச்சர்கள் கீதா ஜீவன், சி.வெ.கணேசன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்து சிசிச்சை முறையினை கேட்டறிந்தனர். தொடர்ந்து ஆலையை பார்வையிட்டனர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கூறியதாவது, “மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட அதிக புகை காரணமாக பணியில் இருந்த ஊழியர்களுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் 8 பேர் குணமடைந்து வீட்டிற்குச் சென்றுள்ள நிலையில், தற்போது 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களும் குணமடைந்து இன்று மாலை அல்லது நாளை மாலை வீட்டிற்குச் செல்வார்கள். மேலும், ஆலையில் அமோனியா கசிவு ஏற்பட வாய்ப்பில்லை. தொழிலாளர் நலத்துறை சார்பில் முழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கப்படும். முறையாக தொழிலாளர்களுக்கு ஆலையில் பாதுகாப்பு அளித்து இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 16 பெண்கள் ஒரிசா மாநிலம், 2 பெண்கள் அசாம் மற்றும் மீதமுள்ளவர்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள். தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து முழுக்க முழுக்க 200 சதவிகிதம் உராய்வால், மின்கசிவால் ஏற்பட்ட விபத்து. பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாலர்களும் நலமாக உள்ளனர். எனவே, ஆலையை இயக்க எந்த ஒரு தடையும் இல்லை” இவ்வாறு அவர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா கசிவா? - நிலா சீ புட்ஸ் தரப்பு விளக்கம் என்ன? - THOOTHUKUDI AMMONIA GAS LEAK