தூத்துக்குடி: திருச்செந்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 'எல்லோருக்கும் எல்லாம்' நிதி நிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம், திருச்செந்தூர் சட்டமன்ற அலுவலகம் அருகே நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தில் பேசியதாவது, "தூத்துக்குடிக்கு பிரதமர் மோடி வந்தபோது, அவரை வாழ்த்தி ஒரு விளம்பரம் வெளியிட்டேன். அந்த விளம்பரத்தை வடிவமைத்தவர் தவறு செய்துவிட்டார், அதை வைத்துக் கொண்டு பாஜக அரசியல் செய்கிறது.
நான் அண்ணாமலையிடம் சொல்கிறேன், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் வாங்குங்கள், நான் அரசியலில் விட்டு விலகுகிறேன், இது என்னுடைய சவால். அண்ணாமலை பிரதமரை சீண்டி விடுகிறார். நீங்கள் சீண்டி விட்டால், எங்களை தூக்கில் போடுவீர்களா? நாடு கடத்துவீர்களா? எதுவும் நடக்காது.
மாநில அரசை தேவையில்லாமல் விமர்சிப்பது நீங்கள் ஒரு பிரதமர் தானா? திமுகவை அழிக்க முடியுமா? தொட்டுப் பார்க்க முடியுமா? பாஜகவில் யாராவது தமிழ்நாட்டில் இருக்கிறார்களா? நல்லது நடந்தால் அதை எதிர்த்து பாஜக கொடி பிடிப்பார்கள்.
திமுக ஆட்சியில் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.350 கோடி மதிப்பில் மெகா திட்டப் பணிகள் நடக்கிறது. அமைச்சர் சேகர்பாபு சாமியார் ஆகிவிடுவார் என நினைக்கிறேன். நீங்கள் சேகர்பாபுவை தொட்டுப் பார்க்க முடியுமா? எடப்பாடி பழனிசாமி பற்றிப் பேச வேண்டியது இல்லை. இத்துடன் அந்த கட்சி அவுட்.
தேர்தலுக்குப் பின்பு அந்த கட்சி இருக்குமா என்பது சந்தேகம்தான். நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசுங்கள், அடுத்தது எங்களிடம் தான் வந்து நிற்க வேண்டும். ஓபிஎஸ் யார் என்று உங்களுக்குத் தெரியும், நாம் எடுக்க வேண்டிய சபதம் என்னவென்றால், அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்" என அவர் பேசினார்.
இதையும் படிங்க: மீண்டும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவை தாக்கல் செய்தார் கனிமொழி !