கரூர்: கடந்த 23-ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி அளவில் வாங்கல் பகுதியில் உள்ள காவிரி ஆற்றுப்பரிசல் துறை விநாயகர் கோயில் பின்புறம், பெயர் அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க ஒருவர், உடலில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடப்பதாக, வாங்கல் கிராம நிர்வாக அலுவலர் பூர்ணிமா வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாங்கல் காவல் நிலைய போலீசார், உடலை கைப்பற்றிய கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, சடலமாக மீட்கப்பட்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒரு இளைஞரை வாங்கல் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடியதாக, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், கொடூரமாக தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது.
இதனை அடுத்து, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோவை அடிப்படையாக வைத்து, வாங்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவரை இருசக்கர வாகனத்தை திருடியதாக நிர்வாணப்படுத்தி, மரக்குச்சியால் அடித்தும், கழுத்தில் காலை வைத்து மிதித்து கொடூரமாக தாக்கியதாக தெரியவந்ததுள்ளது.
பின்னர், வழக்குப்பதிவு செய்த வாங்கல் காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியன், கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த கதிர்வேல், வாங்கல் சானங்கோட்டை எஸ்டேட் நகரைச் சேர்ந்த பாலாஜி, வாங்கல் ஈ.வெ.ரா தெருவைச் சேர்ந்த கருவாடு என்கிற முத்து, அதே தெருவைச் சேர்ந்த கரன்ராஜ் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக வினோத்குமார், கதிர்வேல் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதேசமயம், பாலாஜி, முத்து மற்றும் கரன்ராஜ் ஆகியோரை போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதனிடையே, சடலமாக மீட்கப்பட்ட வட மாநில இளைஞரின் பெயர் மற்றும் விலாசம் ஆகியவை தெரியாததால் போலீசார், கரூரில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் தங்கி பணியாற்றி வரும் வட மாநிலத்தவர்களிடம் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்டவரின் வீட்டில் பாய்ந்த பெட்ரோல் குண்டு!