சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து தற்போதைய திமுக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டனர். இதனை மறு ஆய்வு செய்யும் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த வழக்கில் நீதிமன்றம் இன்று (ஆக.7) தீர்ப்பளிக்கிறது.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வழக்கு: கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 2006 ஆம் ஆண்டு முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் ரூ.44 லட்சத்து 59 ஆயிரத்து 67 மதிப்பிலான சொத்துகளை வருமானத்திற்கு அதிகமாக சேர்த்ததாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூா்த்தி ஆகியோர் மீது கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்குகளிலிருந்து அமைச்சர் உட்பட அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன்வந்து நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் விசாரணை நடத்தினார்.
லஞ்ச ஒழிப்புத்துறை பதில்: இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், வழக்கில் புதிய ஆவணங்கள் இல்லாதபோது வழக்கை ரத்து செய்ய நீதிமன்றத்துக்கு உரிமை உள்ளது. புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கினாலும் தொடர் விசாரணையில் தான் ஒருவர் குற்றவாளியா? இல்லையா? என்பது தெரியவரும். விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஆதாரம் இல்லை என தெரியவந்தால் அவர்களை சிறப்பு நீதிமன்றம் விடுவிக்கலாம்.
புகார் அளிக்கப்பட்டதற்காக மட்டுமே ஒருவரை குற்றவாளியாகக் கருதி விசாரணை நடத்தக் கூடாது. புகாரின் உண்மைத் தன்மை குறித்து விசாரணை அமைப்பு தனது விசாரணையை நடத்தி முடித்துள்ளது. விசாரணை அறிக்கை அடிப்படையில், நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் தங்கம் தென்னரசு வழக்கு: கடந்த 2006 - 2011 வரையான திமுக ஆட்சிக் காலத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அதிமுக ஆட்சியில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. கடந்த 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வழக்கில், கடந்த 2022ஆம் ஆண்டு தீர்ப்பளித்த ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம், இருவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து இந்த தீர்ப்பையும் மறு ஆய்வு செய்ய, தாமாக முன்வந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்கில் தங்கம் தென்னரசு சார்பில், ஆட்சி மாற்றத்துக்குப் பின் பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கில் நியாயமான விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். எனினும், ஆதாரங்களைப் புறக்கணித்து விட்டு வழக்கு தொடர்வதை நியாயமான விசாரணையாகக் கருத முடியாது.
வழக்குப்பதிவு செய்யும் முன் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கைப் பரிசீலித்திருக்க வேண்டும். மேல் விசாரணைக்குப் பின், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை என வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்தால், சம்பந்தப்பட்ட நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கலாம். அதற்கு சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு முழு அதிகாரமும் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
லஞ்ச ஒழிப்புத்துறை பதில்: மேல் விசாரணையில் அமைச்சருக்கு எதிராக எந்த ஆவணங்களும் இல்லாததால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். காரணங்கள் சரியாக இருந்ததால் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டது.
விசாரணை அதிகாரியிடம் நீதிபதி கேள்வி: தங்கம் தென்னரசு வழக்கில் விசாரணை அதிகாரியான பூமிநாதனிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். அதில், எத்தனை ஆண்டுகளாக ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு 7 ஆண்டுகளாக ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளைப் புலன் விசாரணை செய்து வருவதாக புலன் விசாரணை அதிகாரி பூமிநாதன் பதிலளித்தார்.
திமுக ஆட்சியில் தங்கம் தென்னரசுவை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்த நீங்கள், ஆட்சி மாற்றத்துக்குப் பின் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என சரமாரியாக கேள்விகளை எழுப்பி கடந்த ஜூன் 16ஆம் தேதி அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த இரு வழக்குகளுக்கும் இன்று (ஆகஸ்ட் 7) தீர்ப்பளிக்க உள்ளார். தீர்ப்பு என்னவாகும் இருக்கும் எனக் கட்சியினர் மத்தியில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஓராண்டுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை? - அரசுக்கு ஐகோர்ட் கேள்வி