சென்னை:கடந்த 2021ஆம் ஆண்டு பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கில், முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரத்து 500 அபராதம் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது.
சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம், தீர்ப்பு தேதி அறிவித்த நிலையில், மேல்முறையீடு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரியும், வழக்கில் தீர்ப்பு தேதி அறிவித்த விழுப்புரம் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய கோரியும் ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு இன்று (பிப்.12) விசாரணைக்கு வந்தது. இதில், ராஜேஸ் தாஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரகாஷ் ஆஜராகி, விழுப்புரம் நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 9 ம் தேதி தாக்கல் செய்த மெமோவில், வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாகவும், ஆனால், அதனை பரீசிலிக்காமல் நீதிபதி இன்று3 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து தீர்ப்பை பிறப்பித்துள்ளதாக வாதிட்டார்.
மேலும், விழுப்புரம் நீதிமன்றம் பிறப்பித்த இந்த தீர்ப்பிற்கு தடைவிதிக்க வேண்டும், மனு தள்ளுபடி என்று மட்டும் அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும், விரிவான தீர்ப்பை அறிவிக்காததால் ஆவணங்களை வரவழைத்து சரிபார்க்க வேண்டும் என்று வாதிட்டார். ஆனால், விழுப்புரம் நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, விழுப்புரம் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தால்தான் ஆவணங்களை பெற்று ஆய்வுசெய்ய முடியும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, தன் மீதான வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய ராஜேஷ் தாஸ் அளித்த மனு மீது காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசின் உரை நிராகரிப்பு.. 2 நிமிடங்களில் நிறைவு செய்த ஆளுநர்.. சட்டப்பேரவையில் நடந்தது என்ன?