சென்னை: நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்துக்கள் தெரிவித்ததாக, நடிகர் மன்சூர் அலிகானுக்கு, த்ரிஷா, குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப்படப் பிரபலங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர். ஆனால், தான் பேசிய முழு வீடியோவையும் பார்க்காமல், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக குற்றம்சாட்டி, நடிகை த்ரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர அனுமதி கேட்டு, மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், விளம்பர நோக்கத்திற்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், இது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் நோக்கம் எனவும் கூறி, மன்சூர் அலிகான் மனுவை 1 லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருந்தார். அது மட்டுமல்லாமல், இந்த அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குச் செலுத்தி விட்டு, அது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என கடந்த டிசம்பர் 22ஆம் தேதி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு ஜனவரி 19 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மன்சூர் அலிகான் தரப்பில், தற்போது நிதி நெருக்கடியில் இருப்பதால், பெருந்தொகையான ஒரு லட்சம் ரூபாய் அபராதத் தொகையை செலுத்துவதற்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை அடுத்து, ஒருவரைப் பற்றி கருத்து தெரிவிக்கும்போது, அதன் மூலம் ஏற்படும் தாக்கத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, அபராதத் தொகையை செலுத்துவதற்கு மன்சூர் அலிகானுக்கு 10 நாட்கள் மேலும் அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் தனி நீதிபதி பிறப்பித்த அபராத உத்தரவை எதிர்த்து மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஜன. 31) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அபராத தொகையை செலுத்துவதாக தனி நீதிபதி முன்பு ஒப்புக்கொண்டு, கால அவகாசமும் பெற்றுவிட்டு, தற்போது அதனை எதிர்த்து எப்படி மேல்முறையீடு வழக்கு தொடர முடியும்? என்று கேள்வி எழுப்பி, தனி நீதிபதி உத்தரவிற்கு தடைவிதிக்க மறுத்தனர்.
அந்த உத்தரவை திரும்ப பெறக் கோரி தனி நீதிபதி முன் வலியுறுத்தலாம் அல்லது பணத்தை கட்ட முடியுமா, முடியாதா என்று தெரிவிக்கலாம் என்று மன்சூர் அலிகான் தரப்புக்கு அறிவுறுத்தி, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: துணை மருத்துவ கவுன்சில் தலைவர்களை 2 மாதங்களில் நியமிக்கவும் - சென்னை உயர்நீதிமன்றம்