சென்னை: தமிழ்நாட்டில் பல நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், மாநகராட்சி எல்லைகளும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை, தூத்துக்குடி, கரூர், நாமக்கல் ஆகிய மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பஞ்சாயத்துக்கள் மற்றும் நகராட்சிகளில் சுகாதாரப் பணியாளர்களாக பணியாற்றிய சீனு, பிரபாகரன், வி.ஜெயா, சி.பாப்பா, ஜி.மதியழகன், தேவிகா, மகேஸ்வரன் உட்பட 81 பேர் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தூத்துக்குடி, நாமக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளில் இணைக்கப்பட்ட தற்காலிக சுகாதாரப் பணியாளர்கள் 3 ஆண்டுகள் பணி செய்திருந்தால் அவர்களை பணி நிரந்தரம் செய்ய தகுதியானவர்கள் என்று உயர் நீதிமன்றம் கடந்த 2015ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு உறுதி செய்தது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகத்துறை கடந்த 2019ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்து, சுமார் 275 பேரது பணியை நிரந்தரம் செய்தது. இந்த அரசாணையின்படி, மனுதாரர்களின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
இதையும் படிங்க : கேரளா ஏடிஎம் கொள்ளை; பிடிபட்டவர்கள் மீது 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு - மாவட்ட எஸ்பி விளக்கம்!
மாநகராட்சிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணி நிரந்தரம் செய்வது தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசு மனு தாக்கல் செய்து, அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று கூறினர்.
இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு உத்தரவிட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், தமிழ்நாடு அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்திருந்தாலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் தடை எதுவும் விதிக்கவில்லை. மேலும், தற்காலிக சுகாதாரப் பணியாளர்கள் சிலருக்கு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது.
அதனால் 3 ஆண்டுகள் தற்காலிக பணியை முடித்துள்ள மனுதாரர்களும் நிரந்தர பணி பெற தகுதியானவர்கள் தான். அதனால், நகராட்சி நிர்வாகம் கடந்த 2019ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின்படி, மனுதாரர்களின் பணியை 12 வாரங்களுக்குள் நிரந்தரம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.