சென்னை: கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பத்மினி, ஆண்டாள், நித்யா ப்ரியா உள்ளிட்ட 9 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அதில், “காமராஜர் நகர் காலனியில் வசித்து வருகிறோம். இந்த இடத்திற்கு சின்ன சேலம் தாசில்தார் பட்டா வழங்கியுள்ளார். ஆனால், இப்பகுதி நீர்நிலை அருகில் இருப்பதால் ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறி தங்களை உடனே காலி செய்ய வேண்டும் என நீர்வளத்துறை பொறியாளர் தரப்பில் கடந்த ஜூலை மாதம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
தங்களது குடியிருப்புகள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படவில்லை. நீர்நிலை பகுதியில் குடியிருப்புகள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கலாம். அதனால், நேரில் ஆய்வு செய்யாமல் இயந்திரத்தனமாக இடத்தை காலி செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் வழக்கு: அஞ்சலை மீதான குண்டர் சட்டம்.. காவல்துறை பதில் அளிக்க உத்தரவு - சென்னை ஐகோர்ட்!
இந்த வழக்கு நீதிபதிகள் பி.பி பாலாஜி மற்றும் ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஆய்வு செய்யாமல் பிறப்பிக்கப்பட்ட நீர்வளத்துறை நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது. உரிய அளவீடு செய்த பின்னர் ஆக்கிரமிப்புகள் செய்திருந்தால் குடியிருப்புகளை அகற்றலாம். ஆய்வு செய்வதற்கு முன் நில உரிமையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும், ஆய்வு பணிகளை 4 வாரத்தில் முடிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.