சென்னை: நீதிபதிகள் ஓய்வுக்கு பின் அவர்களை தற்காலிக நீதிபதிகளை நியமிக்க ஏதுவாக, புள்ளி விவரங்களை கடைபிடிக்க பதிவுத்துறைக்கு உத்தரவிடக்கோரி வி.பி.ஆர் மேனன் என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை உய ர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், “சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 75. தற்போது 66 நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். 2025ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் 13 பேர் ஓய்வுபெற உள்ளனர். அதனால், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறைவதற்கு பதிலாக அதிகரித்து வருகிறது.
மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65ஆகவும், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 62 ஆகவும் உள்ளது. நீதிபதிகளுக்கான ஓய்வு வயது நிர்ணயம் செய்வது என்பது பல ஆண்டுகளாக அவர்கள் பெற்ற சட்ட அனுபவங்களை, வயதை காரணம் கூறி நிறுத்துவதற்கு சமமாகும்.
இதையும் படிங்க: கொய்யாப்பழ ஜூஸை கூடுதல் விலைக்கு விற்ற சூப்பர் மார்க்கெட்.. நுகர்வோர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
இந்திய அரசியலமைப்பு 224Aன் படி, நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க ஓய்வு பெற்ற நீதிபதிகளை உயர் நீதிமன்றங்களில் தற்காலிகமாக நியமிப்பது குறித்து கடந்த 2021ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஶ்ரீராம், செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, பதிவுத்துறை ஓய்வுபெற்ற நீதிபதிகளின் விவரங்களை பல்வேறு காரணங்களுக்காக சேகரிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் தற்காலிக நீதிபதிகள் நியமிப்பதாக இருந்தால் இந்த புள்ளி விவரங்கள் உபயோகமாக இருக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.