சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி, கடந்த 2018-19ம் ஆண்டு முதல் 2020-21ம் ஆண்டு வரை செலுத்தாமல் உள்ள ரூ.76 ஆயிரத்து 275 கட்டண பாக்கியை 12 சதவீத வட்டியுடன் செலுத்த மாணவியின் பெற்றோருக்கு உத்தரவிடக் கோரி பள்ளி நிர்வாகம் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், பள்ளி நிர்வாகம் வழங்கும் வசதிகளுக்கு ஏற்பவே கட்டணம் வசூலிக்கிறதா? என ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவுக்கு உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து பள்ளி நிர்வாகம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கட்டண வசூல் முறைப்படுத்தல் சட்டத்தை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், உச்சநீதிமன்ற வழக்கு முடிவுக்கு வரும் வரை எந்த விசாரணையும் மேற்கொள்வதில்லை என கட்டண நிர்ணயக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன், பள்ளிகள் வழங்கும் வசதிகளுக்கு ஏற்ப தான் கட்டணம் வசூலிக்கிறதா? என சரிபார்க்க வகை செய்யும் சட்டப்பிரிவை தவிர, மற்ற பிரிவுகளை தான் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறி, பள்ளிகள் வழங்கும் வசதிகளுக்கு ஏற்றபடி தான் கட்டணம் வசூலிக்கிறதா? என சரிபார்க்க கட்டண நிர்ணயக் குழுவுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.
மாணவியின் தந்தை தரப்பில், ரூ.50 ஆயிரம் கட்டணத்தை அக்டோபர் 18ம் தேதிக்குள் செலுத்தி விடுவதாக தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பள்ளியின் கட்டண விவரங்கள் குறித்து சரிபார்க்கும்படி, கட்டண நிர்ணயக் குழுவுக்கு உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்