சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஆலை மூடப்பட்டது. இந்த நிலையில், அபாயகரமான கழிவுகள் ஆலை வளாகத்தில் தேங்கிக் கிடப்பதால் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆலையை இடிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும் சமூக ஆர்வலர் பாத்திமா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்றம், ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள மாசுவை அகற்றுவதற்கான திட்டத்தை வகுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாசுவை அகற்றுவதற்கான திட்டத்தை வகுக்கத் தனியார் நிறுவனத்தை நியமிக்க உள்ளதாகத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்தது.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தூத்துக்குடியில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள மாசுவை சீர் செய்யும் திட்டம் வகுக்கும் பணியைத் தனியாருக்கு வழங்குவது ஏன்? மாசு அகற்றத்தில் நிபுணத்துவம் பெற்ற வாரியம், அந்த பணிக்குத் தனியாரை நியமிக்க முடிவெடுத்தது ஏன்? என கேள்வி எழுப்பினர்.
மேலும், ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதி எந்தளவுக்கு மாசு ஏற்பட்டுள்ளது? என வகைப்படுத்த வேண்டும். அவற்றை அகற்றுவதற்கான திட்டத்தை விரைந்து வகுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடி உதவியாளர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு!