சென்னை: அதிமுக செய்தி தொடர்பாளரான திருநங்கை அப்சரா ரெட்டி, தனக்கு எதிராக அவதூறு வீடியோக்களை யூ-டியூபில் வெளியிட்டு களங்கம் விளைவித்ததாகக் கூறி, யூ-டியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் மீது மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், யூ-டியூபில் கருத்துக்களை வெளியிடும் உரிமை நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்றும், அது மற்றவர்களின் தனிப்பட்ட உரிமையில் தலையிட முடியாது எனக் கூறி, அப்சரா ரெட்டிக்கு 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க யூ-டியூபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் தனது தரப்பு விளக்கம் ஏதும் கேட்காமல், ஒரு தரப்பு வாதத்தைக் கேட்டுப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என யூ-டியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், வழக்கு தொடர்ந்ததும், நோட்டீஸ் அனுப்பப்பட்டதும் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு தெரியும் எனக் கூறி, அதற்கான ஆதாரங்களை அப்சரா ரெட்டி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த ஆதாரங்களை ஆய்வு செய்த நீதிபதி சதீஷ்குமார், நீதிமன்றத்திலிருந்து நோட்டீஸ் பெற்றதை அடுத்து வழக்கறிஞரை நியமித்த ஜோ மைக்கேல் பிரவீன், அதன் பின் வழக்கு விசாரணையில் பங்கேற்காத நிலையில், வழக்கில் நோட்டீஸ் ஏதும் வரவில்லை எனக் கூற முடியாது எனத் தெரிவித்து, 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கப் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: இளைஞர்களுக்கெல்லாம் வேலை இருக்கிறது... பா.சிதம்பரமும், ராகுலும் தான் வேலையில்லாமல் இருக்காங்க- அண்ணாமலை ஆவேசம்! - Lok Sabha Election 2024