சென்னை: ஆருத்ரா மோசடி வழக்கில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டதையடுத்து திருவள்ளூர் கிளை இயக்குனர் சசிகுமாரின் ஜாமீன் மனு, சென்னை உயர் நீதிமன்றத்தால் இன்று (ஏப்.29) தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆருத்ரா கோல்ட் நிறுவனத்திற்கு எதிரான, 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் மோசடி வழக்கில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதுவரை 23 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில், 25வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குனர் சசிகுமார் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிபிசிஐடி குற்றம் சாட்டுவது போல், தான் திருவள்ளூர் கிளை இயக்குனர் இல்லை எனவும் அலுவலக ஊழியராக மட்டுமே தான் பணியாற்றியதாகவும் கூறினார்.
தம்மிடம் விசாரணை நடத்தப்பட்டுவிட்ட நிலையில், 200 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதைக் கருதி ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. சிபிசிஐடி சார்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்ப ராஜ் ஆஜராகி, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ராஜசேகர் இன்னும் துபாயில் இருப்பதாகவும், அவரை இந்தியா அழைத்து வந்து விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும் கூறினார்.
மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளதால் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதைத் தொடர்ந்து சிபிசிஐடி தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சசிகுமாரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.