நீலகிரி: தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மாநிலப் பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது என்று மாநில பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.
முன்னதாக, தமிழ்நாட்டில் வரும் 20ஆம் தேதி அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதேபோல், மே 18 (இன்று), மே 19 மற்றும் 21ஆம் தேதி தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நீலகிாி மாவட்டத்தில் நேற்று இரவில் பலத்த மழை பெய்ததால் மலை ரயில் பாதையில் பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்ததால் தண்டவாளங்கள் சேதம் அடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குன்னுாா் - மேட்டுப்பாளையம் மலைரயில் பாதையில் போக்குவரத்து இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் மலைரயிலில் பயணம் மேற்கொள்ள விருந்த பயணிகள் ஏமாற்றத்துடன் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து திரும்பிச் சென்றனர். இது தொடர்பாக, ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'நீலகிரி மலை ரயிலின் கல்லார் - ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், ரயில் பாதையில் மண் மற்றும் பாறைகள் விழுந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே, கீழே குறிப்பிட்டுள்ளபடி The Nilgiri Mountain Railway-இன் ஒரு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில் எண் 06136 மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் ரயில், 18.05.2024 அன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து 07.10 மணிக்குப் புறப்பட வேண்டியிருந்தது. ரத்து செய்யப்பட்ட ரயில் சேவையில் பயணிக்கும் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் முழுவதுமாக திருப்பி அளிக்கப்படுகிறது' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நெல்லை யை மீண்டும் மிரட்டுகிறதா வானிலை?.. திடீரென வந்திறங்கிய பேரிடர் மீட்பு குழு - காரணம் என்ன? - Heavy Rain Alert In Nellai