திருச்சி: திருச்சி மாநகரின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று காந்தி சந்தை. காந்தி மார்கெட்டின் கட்டுமானப் பணிகள், கடந்த 1867ஆம் ஆண்டு துவங்கி 1868இல் முடிந்தது. அதன்பின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, 1927ஆம் ஆண்டு மார்கெட் விரிவுபடுத்தப்பட்டு 1934ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
அதே ஆண்டு காந்தி திருச்சி மார்கெட்டை திறந்து வைத்தார். திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில் பழைய மதுரை ரோடு பகுதியில் புதிதாக மொத்த காய்கறி சந்தை வணிக வளாகம் கட்டும் பணி மேற்கொள்வதற்கு விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டு 236 கோடி மதிப்பீட்டில், 3.70 ஏக்கர் பரப்பளவு தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த திட்டப்பணிகள் தொடர்பாக வியாபாரிகள் சங்கங்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் வியாபாரிகளின் கருத்துக்களை தெரிவிக்கும் விதமாக நடைபெற்றது. இந்த கருத்து கேட்புக் கூட்டத்தில் வியாபாரிகள் பேசும் போது, “140 வருடங்களாக திருச்சி மாநகர் பகுதியில் ஒரே இடத்தில் இருந்து வரும் காந்தி மார்க்கெட்டை மாற்ற வேண்டாம். சுற்றியுள்ள போக்குவரத்து நெரிசலை சரி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். காந்தி மார்க்கெட் பகுதி மட்டும் தான் பொதுமக்கள் வந்து செல்வதற்கு ஏற்ற வசதியாக இருக்கும். எனவே, காந்தி மார்க்கெட்டை மாநகர் பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டாம் என வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே புதிதாக காய்கறி மார்க்கெட் கட்டப்பட திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் கருத்து கேட்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வியாபாரிகளிடம் கருத்து மட்டும் கேட்கப்பட்டது. அதன் பின்னர், காந்தி மார்க்கெட்டில் இருந்து வியாபாரிகள் அங்கு மாற்றப்படுவது குறித்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்” என தெரிவித்தார்.
இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு உள்பட 12 வியாபார சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், வியாபாரிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.