நோய்தொற்று ஆபத்து! மருத்துவ கழிவுகளுடன் நிரம்பி வழிந்த அரசு மருத்துவமனை குப்பைத் தொட்டிகள்! - CHROMEPET GH WASTE DISPOSAL
சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள குப்பை தொட்டிகள் நேற்று முன்தினம் மருத்துவ கழிவுகளுடன் நிரம்பி வழிந்து இருந்த நிலையில் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
Published : Nov 21, 2024, 11:35 AM IST
சென்னை: சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டோர் உள்நோயாளியாகவும், 1000க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தினம்தோறும் 1000க்கும் மேற்பட்ட மக்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று, மாதாந்திர மருந்துகளையும், மாத்திரையும் பெற்று வருகின்றனர்.
இந்த குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் குப்பைகளை போடுவதற்கு நான்கு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவக் கழிவுகள் மற்றும் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் வீசும் குப்பைகள் என அனைத்து குப்பைகளும் கொட்டி வைக்கப்படுகிறது.
நிரம்பி வழியும் குப்பைத் தொட்டிகள்: இந்த நிலையில், நான்கு குப்பைதொட்டிகளும் கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 18) ஆம் தேதி குப்பைகளால் நிரம்பி காணப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனை வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசி வருவதாகவும், மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
குப்பைத் தொட்டியில் மருத்துவக் கழிவுகள்: மேலும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் குப்பை தொட்டிகள் முறையாக மூடி வைக்காமல் திறந்தபடியே இருக்கிறது. குப்பை தொட்டிகள் நிரம்பியும், அதனை அகற்றாமல் உள்ளனர். குப்பை தொட்டிகளை சுற்றி மருத்துவக் கழிவு உள்ளிட்ட பொருட்களை அரசு மருத்துவமனை ஊழியர்கள் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகின்றனர் என பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ராணிப்பேட்டையில் கணவன், குழந்தையை கொன்ற பெண்... ஐந்து ஆண்டுகள் கழித்து தண்டனை விதித்த நீதிமன்றம்!
பொதுமக்கள் கோரிக்கை: மேலும் இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ கழிவுகளை வீசி வருகின்றனர். மேலும் மருத்துவக் கழிவுகளை கொட்டும் குப்பை தொட்டிகளை சுற்றி பிலிச்சிங் பவுடர் கூட கொட்டப்படவில்லை.
நடவடிக்கை வேண்டும்: இது குறித்து உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவக் கழிவுகள் அனைத்தையும் முறையாக அப்புறப்படுத்த வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் உள்ள குப்பைத் தொட்டியை தவிர்த்து, மற்ற இடங்களில் மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பொருட்களை கொட்ட கூடாது என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவமனை டீன் பதில்: இந்நிலையில், இது குறித்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனை டீன் பழனிவேலை தொடர்பு கொண்டு கேட்டபோது, "தாம்பரம் மாநகராட்சியில் குப்பை அள்ளும் வாகனம் பழுதாகி விட்டதால், கடந்த 17ஆம் தேதி மற்றும் 18ஆம் தேதிகளில் குப்பைகளை அப்புறப்படுத்த முடியாமல் போய்விட்டது. ஆனால் 19ஆம் தேதி அதிகாலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அனைத்து குப்பைகளும் அகற்றப்பட்டுள்ளது.
இனி குப்பை தொட்டிகள் நிரம்பியதும், மருத்துவக் கழிவுகள் முறையாக அகற்றப்படும். மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கழிவு உள்ளிட்ட குப்பைகள் வீசப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். குப்பை தொட்டிகளை சுற்றி பிளீச்சிங் பவுடர் போடப்படும்," எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்