சென்னை: கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பேரிடருக்கு பின் இருதய பாதிப்புகள் பெரும் அளவில் கண்டறியப்படுகின்றன. இளையோர் மத்தியில் அதிகரித்து வரும் மாரடைப்பு குறித்து பல வகைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த ஆராய்ச்சி குறித்தான விவரங்கள் விரைவில் புத்தகமாக வெளியிடப்படவுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், “கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு குறித்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்தியாவில் முதன்முறையாக கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 19 ந் தேதி முதல் 21 ந் தேதி வரை 3 நாட்கள் மருத்துவத்தின் எதிர்காலம் (Future of Medicine) என்ற தலைப்பில் நடத்தப்பட்டது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், நிதிநிலை அறிக்கையில் , 91வது அறிவிப்பில், பன்னாட்டு மருத்துவ மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த மாநாடு 3 நாட்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கழகத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பவர்கள், மருத்துவம் சார்ந்த படிப்புகளை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 4,465 பேர் ஆகும், முதுநிலை மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 8840 பேர் ஆகும்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கழகத்தின் கீழ் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளை படித்து வரும் மாணவர்கள் 63,310 பேர் ஆகும். தமிழ்நாடு முழுவதும் 738 கல்லூரிகளில் மருத்துவம், செவிலியர், பிசியோதெரபி பாடப்பிரிவு நடத்தப்படுகிறது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த மாணவர்கள் தங்களின் தரத்தினை மேம்படுத்திக்கொள்வதற்கும், ஆராய்ச்சி திறனை அதிகரிப்பதற்கும் இந்த மாநாடு தொடங்கப்பட்டு நடத்தி
முடிக்கப்பட்டுள்ளது. உலகில் பல்வேறு நாடுகளில் பல்வேறு மருத்துவ மாநாடுகள் நடத்தப்படுகின்றது.
கடந்த ஓராண்டிற்கு முன்னாள் சிங்கப்பூர் நாட்டில் நடத்தப்பட்ட அவசர கால மருத்துவ சிகிச்சைகள் குறித்த மாநாட்டில் பங்கேற்று இருக்கின்றேன். இருதயவியல், மகப்பேறு மருத்துவம், சிறுநீரக துறை, மனநல மருத்துவம், நரம்பியல் மருத்துவம், புற்றுநோய் மருத்துவம், அவசர சிகிச்சை மருத்துவம் என்று ஏதாவது ஒரு துறை சார்ந்து தான் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. ஆனால் உலகில் முதன்முறையாக எதிர்கால மருத்துவம் எனும் தலைப்பில் அனைத்து துறைகளும் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, சிங்கப்பூர், கத்தார், ஆஸ்திரிலேயா மற்றும் கனடா ஆகிய 7 நாடுகளில் இருந்து 28 மருத்துவ நிபுனர்கள் உரை நிகழ்த்துவதற்கும், ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கும் இந்த மாநாட்டிற்கு வருகை புரிந்தனர்.
இந்தியா முழுவதிலும் இருந்து 185 மருத்துவ நிபுனர்கள் உரை நிகழ்த்தியிருகின்றனர். 12 பேச்சாளர்கள் காணெளி மூலமாகவும் 225 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்று தங்களுடைய கட்டுரைகள் மற்றும் உரைகளை சமர்பித்துள்ளனர்.
மருத்துவ மாணவர்கள் விரிவுரையாளர்கள் சமர்ப்பித்த 625 க்கு மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் தொகுப்புகளும் (Eunioa) புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இம் மாநாட்டிலே பங்கேற்ற பல்வேறு நாடுகளின் மருத்துவ வல்லுனர்களின் ஆராய்ச்சி குறிப்புகளும் தொகுத்து (Vision Statement 2024) புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளன. மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ்
மருத்துவம் போன்ற 27 மருத்துவ பிரிவின் கீழ் விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கழக முதுநிலை மாணவர்களுக்கு 30 மதிப்பெண்களும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் 6 புள்ளிகளும், பல் மருத்துவ கவுன்சிலின் சார்பில் 16 புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் ஆற்றப்பட்ட உரைகள், சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் ஆகியவற்றை புத்தகங்களாகவும் ஆவணங்களாகவும், காணொளி காட்சிகளாகவும் தனித்தனியே தயார் செய்து, ஒட்டுமொத்தமாக மருத்துவத் துறை பயன்பெறும் வகையில் ஒன்றிய அரசின் மருத்துவத்துறை நிர்வாகத்திற்கும், இந்தியாவில் உள்ள மற்ற மாநில சுகாதார நிர்வாகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பேரிடருக்கு பின் இருதய பாதிப்புகள் பெரும் அளவில் கண்டறியப்படுகின்றன. இளையோர் மத்தியில் அதிகரித்து வரும் மாரடைப்பு குறித்து பல வகைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த ஆராய்ச்சி குறித்தான விவரங்கள் விரைவில் புத்தகமாக வெளியிடப்படவுள்ளது. ஆனந்த் ரோஹாக்கி என்ற அமெரிக்க மருத்துவர் நடைபெற்ற இந்த மாநாட்டில் இருதய பாதிப்புகள் தொடர்பாக பல்வேறு ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்திருந்தார்.
எதிர்காலத்தில் மருத்துவ மாணவர்கள் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளின் தகவல்கள் தருவதன் அடிப்படையில் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் நிலை ஆளுநரிடம் இருக்கின்றது ஆளுநர் எந்தெந்த கோப்புகளை நிலுவையில் வைத்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியும் எனவே சித்த மருத்துவத்தைப் பற்றி இன்னொரு நாள் சித்தம் தெளிய பேசிக்கொள்ளலாம்", என தெரிவித்தார்.