சென்னை: சென்னை காமராஜர் அரங்கத்தில் மதிமுக சார்பில் அண்ணாவின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில், அண்ணா குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ மற்றும் மதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "மதிமுக சார்பில் ஆண்டுதோறும் அண்ணாவின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அண்ணாவின் கொள்கைகளையும், அவரின் பேச்சாற்றல் மற்றும் திறன்களை மற்றவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டும் அதேபோல் அண்ணாவின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.
அண்ணா திராவிட இயக்கத்தை உருவாக்கினார். தற்பொழுது திராவிடர்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. திராவிடத்திற்கும், திராவிட இயக்கத்திற்கும் பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் மதிமுக துணை இருக்கும். தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரின் செயல்பாட்டை இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் உற்று நோக்கி பின்பற்றுகின்றன.
முதலமைச்சரின் அமெரிக்கா பயணத்தின் மூலம் 7,000 கோடி முதலீடுகள் தமிழ்நாடு வருவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். மூடிவிட்டுச் சென்ற Ford கம்பெனியை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார். மக்கள் அதனை வரவேற்றுள்ளனர்.
இதையும் படிங்க : “சீட் ஷேர் பற்றி இப்போது பேச வேண்டிய அவசியமில்லை”.. டி.கே.எஸ்.இளங்கோவன்! - DMK VCK ALLIANCE ISSUE
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற திருமாவளவனின் பேச்சு குறித்த கேள்விக்கு, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும். திருமாவளவனின் பேச்சு அவருடைய உரிமை. தமிழ்நாட்டில் இருப்பதைப் போன்ற மோசமான ஆளுநர் எந்த மாநிலத்திலும் இருந்தது இல்லை. ஆளுநர் பதவி தேவையில்லாதது.
ஆளுநர் ஆர்.என்.ரவியைப் போன்று தற்குறியாக யாரும் இருக்க முடியாது. தேர்தலில் தோற்றவர்கள், அரசுப் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்களை ஆளுநர்களாக நியமிக்கின்றனர். இது போன்ற பதவிகள் தேவை இல்லை என நாங்கள் ஏற்கனவே கூறி வருகிறோம். கடந்த முறை ஆளுநரை திரும்பப் பெற வேண்டி மதிமுக போராட்டம் நடத்தியது, தேவைப்பட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம்.
விடுதலை சிறுத்தைகளின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு முறைப்படி எந்த விதமான அழைப்பும் விடுக்கவில்லை. எனது சொந்த கிராமமாக கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடை மூட வேண்டும் என போராட்டம் நடத்தி அதனை மூடினோம்.
அந்த போராட்டத்தில் 92 வயது மதிக்கத்தக்க எனது தாயும் கலந்து கொண்டார். எங்கள் ஊரில் இருந்த டாஸ்மாக் கடையை மூடுவதற்கு போராட்டம் நடத்திய 150க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் சென்று டாஸ்மாக் கடை மூடுவதற்கு அனுமதி வாங்கி மூடி வெற்றி பெற்றுள்ளோம்.
முதல் முதலாக டாஸ்மாக் கடை மூடிய பெருமை எங்களையேச் சேரும். ஆனால், அரசு நீதிமன்றம் சென்று டாஸ்மாக் கடை திறக்கின்றனர். ஏற்கனவே நான் உட்பட 150 பேர் மீது போடப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மதுவிலக்கு கொள்கையில், டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்பேன் என்றுதான் முதலமைச்சரே தெரிவித்துள்ளார் என்றார்.