சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 4 சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில் 3 சுற்றுக் கலந்தாய்வில், மாணவர்கள் ஒரு கல்லூரியிலிருந்து வேறு கல்லூரிக்கு மாறுவதற்கு அனுமதிக்கப்பட்டது.அதன் பின்னர் இறுதிச்சுற்று கலந்தாய்வாக 'ஸ்ட்ரே வேகன்ஸி' எனப்படும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கு 4வது சுற்று கலந்தாய்வு நடைபெற்றது.
அரசு ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரி பொறுத்தவரை எம்.பி.பி.எஸ் படிப்பில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் ஒரு காலியிடம், அரசுப் பல் மருத்துவக்கல்லூரிகளில் 23 இடங்கள், 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக்கல்லூரியில் BDS இடங்கள் 4 காலியாக இருந்தது.
MBBS சுயநிதி கல்லூரிகளில் 67 இடங்களும், தனியார் பல்கலைக்கழகங்களில் 61 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 134 இடங்களும் ஆக மொத்தம் 290 காலியிடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட்டது. அரசு ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் 145 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தனியார் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் 129 இடங்கள் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் நவம்பர் 5ந் தேதி வரையில் கல்லூரியில் சேர்ந்தனர். ஒதுக்கீட்டு ஆணையைப் பெற்றவர்களில் எம்பிபிஎஸ் படிப்பில் 6 காலியிடங்களும், கடலூா் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 4 பிடிஎஸ் இடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 24 பிடிஎஸ் இடங்கள் என 28 பல் மருத்துவ இடங்கள் காலியாக உள்ளன.
இதையும் படிங்க: ஒசூரில் போலி மருத்துவர்கள் கைது..கிளினிக்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள்!
மாணவர்களுக்கு தடை: மருத்துவ மாணவா் சோ்க்கைக்கு தேசிய மருத்துவ ஆணையம் வழங்கிய அவகாசம் நிறைவடைந்த நிலையில், அந்த இடங்களை இனி நிரப்ப முடியாத நிலை இருந்தது. இறுதிச் சுற்று கலந்தாய்வில் பங்கேற்று எம்பிபிஎஸ் படிப்பை தேர்வு செய்த 4 பேரும், பிடிஎஸ் படிப்பை தேர்வு செய்த 16 பேரும் என 20 பேர் கல்லூரிகளில் சேரவில்லை. இதனால் அவா்களுக்கு அபராதம் மற்றும் ஓராண்டு மருத்துவ படிப்பில் சேருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
பதிவேற்றம் செய்ய உத்தரவு: இந்த நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படுவது அவசியம். அதன்படி, நடப்பாண்டில் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள், மதிப்பெண் விவரம், இட ஒதுக்கீடு விவரம், கட்டண விவரம் உள்ளிட்டவற்றைத் தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையத்தில் பதிவேற்ற கடந்த 8 ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. தற்போது 23 ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.