மயிலாடுதுறை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் இன்று (பிப்.07) நடைபெற்ற ஊட்டச்சத்து உணவுகள் வழங்கும் நிகழ்ச்சியின்போது, மாணவி ஒருவர் பள்ளியில் காலம் காலமாய் இருக்கும் கருப்பு போர்டுக்கு பதிலாக, அதனை பச்சை நிறத்தில் மாற்றித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய், பிப்ரவரி 2ஆம் தேதி, தான் துவங்கிய தமிழக வெற்றி கழகம் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஒப்புக்கொண்ட படங்களை முடித்த பின் முழுமையாக அரசியலில் ஈடுபட உள்ளதாகவும், 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலே தனக்கு இலக்கு எனவும் அவர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட விஜய், அரசியல் கட்சி துவங்கியதை தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். மேலும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்களும் நடிகர் விஜய் கட்சி துவங்கியதற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். மேலும், கட்சி தொடங்கியதில் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ள அவரது ரசிகர்கள், பொதுமக்களுக்கு பல்வேறு நல உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஒன்றியம் கீழ ஆத்துக்குடி கிராமத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் 100 பேருக்கு, ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இன்று தொடங்கி வைத்தனர். இதில், அக்கட்சியின் மாவட்டத் தலைவர் குட்டிகோபி கலந்து கொண்டு, மாணவ மாணவிகளுக்கு இனிப்பு, சுண்டல், முட்டை மற்றும் பால் ஆகிய ஊட்டச்சத்து உணவுகளை வழங்கி மாணவர்களிடையே உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியின் முடிவில், அப்பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர், தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் பள்ளியில் உள்ள கரும்பலகையை பார்வைக்கு "பளிச்" என தெரியும் வகையில் பச்சை நிறத்தில் மாற்றித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், பள்ளியில் ஆண் பெண் இருபாலருக்கும் ஒரே கழிப்பறை உள்ளதால் ஏற்படும் சங்கடத்தைப் போக்கும் வகையில் இருபாலருக்கும் தனித்தனியே கழிப்பறை கட்டித்தர வேண்டும் எனவும் கேரிக்கை வைத்தார்.
அதனை கேட்டுக் கொண்ட கட்சியின் மாவட்டத் தலைவர் குட்டி கோபி, இதனை தலைமைக்கு தெரியப்படுத்தி தேவையான நடவடிக்கையை மேற்கொள்வதாக மாணவியிடம் உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில், கட்சியின் இளைஞரணி மாவட்டத் தலைவர் ராஜ்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.