தஞ்சாவூர்: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களாகவே தொகுதி முழுவதும் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒருபகுதியாக, நேற்று கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி ஊராட்சிக்குட்பட்ட நரிக்குறவர் இன மக்கள் அதிகம் வாழும் ஏழுமாந்திடல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, "மோடி தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக அரியணை ஏற, தனக்கு மாம்பழ சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.
அப்போது சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் வேட்பாளர் ம.க. ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், அடிப்படை தேவைகளையும் வெற்றி பெற்ற 60 நாளில் நிறைவேற்றித் தரப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். இதற்கிடையே, அப்பகுதி மக்கள் வழிபடும் குலதெய்வமான புற்று மாரியம்மன் கோயிலில் தனது வெற்றிக்காக வேட்பாளர் ஸ்டாலின் வழிபாடு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு வேட்பாளர் ம.க. ஸ்டாலின் கும்பகோணத்தில் தலா ஒரு லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களுடன் நடத்தி வைத்த, 90 ஜோடிகளுக்கான இலவச திருமணத்தில், இப்பகுதியில் ஐந்திற்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன ஜோடிகள் பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.