தஞ்சாவூர்: கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் நேற்றிரவு (வியாழக்கிழமை), இந்தியா கூட்டணியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் ஆர்.சுதா அறிமுகக் கூட்டம் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்தாய்வு கூட்டம், தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சு.கல்யாணசுந்தரம் எம்.பி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுக எம்பிக்கள் சண்முகம், செ.ராமலிங்கம், அரசு தலைமை கொறடா கோவி செழியன், கும்பகோணம் எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன், துணை மேயர் சு.ப.தமிழழகன், தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டீ.ஆர்.லோகநாதன், மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜ்குமார், கும்பகோணம் மேயர் கே.சரவணன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தலைமை உரையாற்றிய தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சு.கல்யாணசுந்தரம் எம்.பி, "மயிலாடுதுறை தொகுதியில் யார் வேட்பாளர் என்பது முக்கியமல்ல. இந்த தேர்தலில் யார் பிரதமராக வரக்கூடாது என்பது தான் முக்கியம். அந்த லட்சியத்திற்காக போராடும் கூட்டணி இது. மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் ஆர்.சுதா, போர் குணம் படைத்த ஜான்சி ராணி. இவரே இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்.
எதிர் அணியான பாஜக கூட்டணி தடுமாற்றமாக உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், கையில் சைக்கிள் சின்னத்தை வைத்துக் கொண்டு, பழைய நியாபகத்தில் வாக்காளர்களிடம் கை சின்னத்திற்கு வாக்களியுங்கள் எனப் பேசும் அளவிற்கு சென்றுவிட்டது" எனக் கிண்டலாக குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து பேசிய மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா, "நான் வேறு பகுதியில் இருந்து இங்கு வந்து போட்டியிடுகிறேன் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. அது உண்மையல்ல. இந்தியா முழுவதும் ஒரே குடும்பமாக உள்ளோம். நாம் அனைவரும் தமிழ் மண்ணின் மைந்தர்கள்.
நான் என்றைக்கும் மயிலாடுதுறையின் மகளாக இருப்பேன். இங்கேயே நிரந்தரமாக வசிப்பேன். இந்திய தேசத்தில் உள்ள மதவாதிகளை ஒழிக்கவும், மத ரீதியாக, இன ரீதியாக, சாதி ரீதியாக பிரிக்கும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை வேரறுக்கவும், தேசம் முழுவதும் இளம் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்த 2024 யுத்தம், ராகுல் காந்திக்கும், மோடிக்குமானது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், மோடிக்குமானது. ஆகவே, நீங்கள் அனைவரும் தவறாமல் எனக்கு கை சின்னத்திற்கு வாக்களித்து, கூடுதல் வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச்செய்ய வேண்டும்" என்றார். முன்னதாக கும்பகோணம் சாரங்கபாணி தெற்கு வீதியில் உள்ள திமுக அரண்மனை வளாகத்தில், தேர்தல் அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: "கை" சின்னத்தை மறக்க முடியாமல் தவிக்கும் வாசன்.. சைக்கிளை மறந்து பிரசாரம்.. - Lok Sabha Election 2024