மயிலாடுதுறை: மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கும்பகோணம் மாநகரில் உள்ள சரஸ்வதி பாடசாலையில் இயங்கிய 187 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடியில், நேற்று (ஏப்.19) தேர்தல் நிறைவு பெற்றதும் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு சீல் வைக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்ட தகவல், மண்டல அலுவலருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு மண்டல அலுவலர், நான் வந்த பிறகு தான் EVM இயந்திரத்திற்குச் சீல் வைக்க வேண்டும் எனக் கூறியதாகவும், எனவே முகவர்கள் அனுமதி பெறாமல் வாக்குச்சாவடி அலுவலர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் சீலை உடைத்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குச்சாவடி முகவர்கள் EVM இயந்திரத்திற்கு மீண்டும் சீல் வைக்காமல் வெளியேறினர். இதனிடையே முகவர்கள் முன்னிலையில், EVM இயந்திரத்திற்கு சீல் வைக்கப்பட்டதாக முகவர்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர்களால் சான்று அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த 187 என்ற வாக்குச்சாவடியில் மொத்தம் 1,350 வாக்குகள் உள்ளன. இதில் 917 வாக்குகள் பதிவானது. இந்த வாக்குச்சாவடி முன் பல்வேறு கட்சி முகவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, கும்பகோணம் டிஎஸ்பி கீர்த்திவாசன் தலைமையில், சரஸ்வதி பாடசாலை பள்ளி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதுகுறித்து பாஜகவைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர் குருமூர்த்தி கூறுகையில், “முகவர்கள் முன்னிலையில் வைக்கப்பட்ட சீலை அகற்றிய சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியினருக்குச் சாதகமாக நடந்து கொண்டாரா என்று பலத்த சந்தேகம் எழுந்துள்ளதால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: மேகதாது அணை விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் மௌனமாக இருப்பது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி! - Mekedatu Dam Issue